Saturday, March 3, 2012

இந்தியாவின் பைனல் வாய்ப்பு அவ்ளோ தான்: ஆஸி.,யை வென்றது இலங்கை!!!

Saturday, March 03, 2012
மெல்போர்ன்::முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலுக்கு முன்னேறும் இந்திய அணியின் கனவு தகர்ந்தது. நேற்று நடந்த பரபரப்பான கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் பைனலுக்கு இலங்கை தகுதி பெற்றது.

ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் ஏற்கனவே ஆஸ்திரேலியா பைனலுக்கு முன்னேறி விட்டது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இலங்கை அணி "பேட்டிங்' தேர்வு செய்தது.

தில்ஷன் ஏமாற்றம்: இலங்கை அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ஜெயவர்தனா (5) ரன் அவுட்டானார். கடந்த போட்டியில் சதம் அடித்த தில்ஷன், இம்முறை 9ரன்களுடன் நடையை கட்டினார்.

சண்டிமால் அபாரம்: பின் இணைந்த சங்ககரா, சண்டிமால் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இதனால் ஸ்கோர் சீராக உயர்ந்தது. கிறிஸ்டியன், தோகர்டி பந்துகளில் சிக்சர் அடித்த சண்டிமால், இத்தொடரில் நான்காவது முறையாக அரைசதம் அடித்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்த சங்ககராவும், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில், சங்ககரா (64) அவுட்டானார். அடுத்து வந்த திரிமான்னே, சண்டிமாலுக்கு நல்ல "கம்பெனி' கொடுத்தார். இந்நிலையில் 75 ரன்கள் எடுத்த போது, சண்டிமால் பட்டின்சன் வேகத்தில் சிக்கினார்.

கிறிஸ்டியன் "ஹாட்ரிக்': மாத்யூஸ் (5) நிலைக்கவில்லை. போட்டியின் 44 வது ஓவரை கிறிஸ்டியன் வீசினார். இதன் மூன்றாவது பந்தில் பெரேரா (5) அவுட்டாகினார். அடுத்த பந்தில் சேனநாயகே, "டக்' அவுட்டானார். ஐந்தாவது பந்தில் குலசேகராவுக்கு, அம்பயர் ராடு டக்கர் (ஆஸி.,) எல்.பி.டபிள்யு., என, தவறான தீர்ப்பு தர, கிறிஸ்டியன் "ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் திரிமான்னே (51) ஸ்கோரை உயர்த்த, இலங்கை அணி 50 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் கிறிஸ்டியன் 5, பட்டின்சன் 4 விக்கெட் வீழ்த்தினர்.

வாட்சன் ஆறுதல்: எட்டிவிடும் இலக்கை விரட்டிய, ஆஸ்திரேலிய அணிக்கு இம்முறை வார்னர், வேட் ஜோடி துவக்கம் கொடுத்தது. வார்னர் (6), வேட் (9) விரைவாக அவுட்டாக, பின் வந்த பாரஸ்ட்டும் (2) நிலைக்கவில்லை. மைக்கேல் ஹசி 29 ரன்கள் எடுத்தார். கேப்டனுக்குரிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன், 83 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஹசி போராட்டம்: கிறிஸ்டியன் (3) சேனநாயகேவின் சுழலில் வீழ்ந்தார். ஒருமுனையில் விக்கெட் வீழ்ந்த போதும், மறுமுனையில் டேவிட் ஹசி, தனி ஆளாக போராடினார். இவருடன் சிறிது நேரம் தாக்குப்பிடித்த பட்டின்சன், 12 ரன்களுக்கு திரும்பினார். மெக்கே (6), ரன் அவுட்டானார். தோகர்டியை (7) மலிங்கா வெளியேற்றினார்.

6 பந்தில் 10 ரன்கள்: கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. குலசேகரா வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை டேவிட் ஹசி (74), தூக்கி அடிக்க, அதனை தில்ஷன் "லபக்' செய்ய, ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் மலிங்கா 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியை அடுத்து இலங்கை அணி 19 புள்ளிகளுடன் பைனலுக்கு தகுதி பெற்றது.

கிறிஸ்டியன் "ஹாட்ரிக்' வீண்: ஒருநாள் கிரிக்கெட்டில் "ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய நான்காவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமை பெற்றார் கிறிஸ்டியன். சர்வதேச அளவில் 32வது வீரரானார். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் புரூஸ் ரீட் (எதிர், நியூசிலாந்து, 1986), ஆன்டனி ஸ்டீவர்ட் (எதிர், பாகிஸ்தான், 1997), பிரட் லீ (எதிர், பாகிஸ்தான், 2003) ஆகியோர் "ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தினர்.

* ஷகாதத் ஹொசைன் (வங்கதேசம்), பாண்ட் (நியூசி.,), மலிங்கா (தென் ஆப்.,) ஆகியோரது "ஹாட்ரிக்கின்' போது, அந்த அணிகள் தோற்றன. நேற்று ஆஸ்திரேலியாவும் தோற்றது.
* இந்தியாவின் கபில் தேவுக்கு (1991, கோல்கட்டா) பின், இலங்கைக்கு எதிராக "ஹாட்ரிக்' நிகழ்த்திய இரண்டாவது வீரர் கிறிஸ்டியன்.

"ஹீரோ' மலிங்கா: இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மலிங்கா, 7.4 ஓவர்கள் பவுலிங் செய்து, 96 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றி, பெரும் எதிர்ப்பை சந்தித்தார். அன்று "ஜீரோவான' மலிங்கா, நேற்று 10 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட் சாய்த்து "ஹீரோ' ஆனார். இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படாமல், சண்டிமாலுக்கு தந்தது துரதிருஷ்டமே.

No comments:

Post a Comment