Saturday, March 03, 2012இலங்கை::இந்த வருடம் ஜெனிவாவில் நடைபெறுகின்ற மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டை முழு உலகுமே உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த பல தடவைகள் நடைபெற்ற கூட்டத் தொடர்களை விட இந்த முறை நடைபெறுகின்ற ஜெனீவா கூட்டத் தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது.
ஏனென்றால் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதாக சில நாடுகள் முனைப்புப் காட்டிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் தான் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உலக நாடுகள் அவதானித்துக் கொண்டிருக்கின்றன.
பொதுவாக என்னைப் பொறுத்தவரையில் 30 வருட யுத்தம் முடிவுக்கு வந்து இன்று வடக்கு கிழக்கு பகுதியில் மட்டுமல்ல முழு இலங்கையிலுமே அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும், சுதந்திரமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் அவர்களது புதிய வாழ்க்கையை ஆரம்பித்து மகிழ்வோடு இருக்கின்ற இந்த காலகட்டத்தில் இது போன்றதொரு களங்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை சில நாடுகள் மேற்கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
ஏனென்றால் யுத்த காலத்தில் பல விடயங்கள் நடைபெற்றுள்ளன. பல இழப்புக்கள் இருந்தன. உண்மையில் அவை மறக்கக் கூடியவை அல்ல. அவை எல்லாம் வேதனையான விடயங்கள். ஏனென்றால் எங்களது தமிழ்த் மக்களுக்கு மட்டுமன்றி முஸ்லிம் மக்கள் சிங்கள மக்கள் என அனைவருமே பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்துதான் தற்போது இந்த யுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.
ஆகவே யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அதனை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டு இன்னும் இன்னும் இனங்களிடையே சில முறுகல்களையும், காழ்ப்புணர்வுகளையும் ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முனைகின்றன இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயம்.
இதனால்தான் எமது தமிழ் மக்களிடம் நாம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம், தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை எங்ளுகடைய நாட்டுக்குள்ளேயே தீர்த்து ஒரு தீர்வைக் கண்டு நாங்கள் இந்த சமாதானத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள். வெளிநாட்டிலுள்ள எமது புலம்பெயர்த் தமிழ் மக்களிடமும் இதனைத்தான் கேட்டுக் கொள்கின்றோம்.
ஏனென்றால் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒரு யுத்த விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு அதனூடாக தண்டனைகள் வழங்குவதால் கூட நாம் மேலும் மேலும் கசப்புணர்வுகளைத்தான் ஏற்படுத்தப் போகின்றோம். இதுதான் கடந்த காலத்து வரலாறுகளாகவும் இருந்தன.
இந்த இடத்தில் நான் ஒரு விடயத்தை பாராட்டுகின்றேன். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்குபற்றாமல் புறக்கணித்திருப்பது உண்மையிலேயே ஒரு வரவேற்கத்தக்க விடயம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிலைமையை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பங்கு பற்றுவதால் எதுவித பலனும் வரப் போவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
அது மாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் ஐயா அவர்களும் அறிக்கை யொன்றையும் வெளியிட்டிருந்தார். இது ஒரு இன ரீதியான ஒரு பாதகத்தை, ஒரு குரோதத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் அவர் கூறியிருக்கின்றார். அதனால்தான் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.
உண்மையில் நான் அந்த கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன் ஏனெனில் அனைத்து அரசியல் வாதிகளிலும் அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்று கூடி பேசி இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது.
எம்மைப் பொறுத்தவரையில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பெருந்தொகையான நிதியை இன்று எமது வடக்கு கிழக்கு பிரதேச மக்களுக்காக ஒதுக்கித்தந்து கொண்டுள்ளார் அபிவிருத்திக்காக இவை பயன்படுத்தப்படுகின்றன.
இன்று அதனூடாக பல அபிவிருத்தி திட்டங்கள் நடைபெறுவதை கண்கூடாக நாங்கள் பார்க்கிறோம். இவற்றை எவரும் மறுப்பதற்கில்லை.
எனவே இது போன்றதொரு வாய்ப்பான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒற்றுமையுடன் புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும்.
ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இக்கூட்டத் தொடர்பில் கூடுதலான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முன்வந்துள்ளன. உண்மையில் நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். ஏனெனில் அதனூடாக மீண்டும் ஒரு சமாதானத்தை நிலைநாட்டி ஒரு உறுதியான எதிர்காலத்தை எமது தமிழ் மக்களுக்கு உருவாக்கலாம் என நாம் எதிர்பார்க்கின்றோம். எனவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment