Friday, March 2, 2012

அணுமின் திட்ட விவகாரம் உச்சகட்டம் ஏடிஜிபி ஜார்ஜ் இன்று கூடங்குளத்தில் ஆய்வு : பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Friday, March 02, 2012
நெல்லை::அணுமின் நிலைய பிரச்னை உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், தமிழக ஏடிஜிபி ஜார்ஜ், கூடங்குளத்தில் இன்று சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்தார். மேலும், சென்னையில் தலைமை செயலருடன் அணுசக்தி துறையினர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதியில் 7 மாதங்களாக போராட்டம் நடக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மவுனம் காத்து வந்தார். நாளுக்கு நாள் பிரச்னை பெரிதான நிலையில், நிபுணர் குழுவை அமைத்தார் ஜெயலலிதா. இக்குழுவினர் கூடங்குளம் பகுதியில் ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், Ôகூடங்குளம் அணு உலை மிகமிக பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதுÕ என்று கருத்து தெரிவித்தது. அதன்பின், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதய குமார் உள்பட குழு பிரதிநிதிகள் சிலரை கோட்டையில் சந்தித்து அவர்களுடைய கருத்துகளை கேட்டறிந்தார். எனினும் அரசு முடிவை அவர் அறிவிக்கவில்லை. கூடங்குளம் விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கன்னியாகுமரியில் நேற்று தங்கியிருந்த தமிழக ஏடிஜிபி ஜார்ஜ் இன்று கூடங்குளத்துக்கு வந்தார். இன்று காலை 9 மணி அளவில் அணு விஜய் நகரில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அணு உலை பகுதிக்கு சென்று பார்வையிட்டார். நுழைவு வாயில் முன்பு போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். நெல்லை டிஐஜி, வரதராஜூ, எஸ்பி, விஜயேந்திர பிதாரி ஆகியோர், கூடங்குளம் நிலவரம் குறித்து விளக்கினர். போராட்டக்காரர்கள் எந்த எந்த வழியாக கூடங்குளத்துக்கு வருகிறார்கள் என்று கேட்டறிந்தார். போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை இடிந்தகரை கிராமத்துக்குள் போலீஸ் போனதில்லை. ஏடிஜிபி அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனாலும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேசவே அவரது வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணுசக்தி துறையினர் தலைமை செயலருடன் ஆலோசனை

கூடங்குளத்தில் ஏடிஜிபி ஆய்வு செய்து வரும் நிலையில், சென்னையில் இன்று அணுசக்தி துறையினர் தலைமை செயலர் மற்றும் மின்வாரிய உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்குவது தாமதமாவதால் ஏற்படும் இழப்பு குறித்தும், மற்ற திட்டங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை குறித்தும் அதிகாரிகளுடன் அணுசக்தி துறையினர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தேவைபட்டால் அணுசக்தி துறை அதிகாரிகள் முதல்வரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்புக்கு பின் அரசு நிலை குறித்தும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்பும் முன் இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment