Friday, March 2, 2012

கொழும்பு தும்முல்ல சந்தியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் வரை தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

Friday,March 02, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினமும் நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் கொழும்பு தெவட்டகஹ முஸ்லீம் பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது.

மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அஸாத் சாலி ஆகியோரின் தலைமையில் இன்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்பாக கூடியவர்கள், பின்னர் கொழும்பு தும்முல்ல சந்தியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர்.

அதனையடுத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் பிரேரணைக்கு இலங்கை மக்களின் எதிர்ப்பை வெளியிடும் வகையில் மஹஜர் ஒன்று அந்த அலுவலகத்தின் பெண் உத்தியோகத்தர்கள் ஒருவரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை கொழும்பு மருதானை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாகவும் இன்றைய தினம் பகல் ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர், அமெரி்க்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மருதானை தொழிநுட்பக் கல்லுரிக்கு அருகில் போக்குவரத்து அமைச்சின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுராதபுரம் ஷிராவஸ்திபுர பகுதியில் இலங்கைக்கு ஆசிவேண்டி பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

No comments:

Post a Comment