Friday, March 02, 2012இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதியில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இராணுவ வீரர் உட்பட மூன்று பேர் காத்தான்குடி பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த 21ம் திகதி ஆரையம்பதியில் ஆயுதமுனையில் வீடொன்றில் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டன. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் அதிகாரி எம்.பி.எம்.தாகாவின் தலைமையில் விசாரணை செய்து வந்த பொலிஸ் குழுவினர் இச்சந்தேக நபர்களை (01.3.2012) நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
இதில் இராணுவ வீரர் ஒருவரும் காத்தான்குடியைச் சேர்ந்த 2பேரும் கைது செய்யப்பட்டு அதில் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆரையம்பதி மற்றும் காத்தான்குடியைச்சேர்ந்த இன்னும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிசாரினால் தேடப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஐயாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற சார்ஜன் கைது!
ஐயாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பேலியகொடை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் சார்ஜன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுக்கையில் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பரை கைப்பற்றிய குறித்த பொலிஸ் சார்ஜன், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்கவும், சாரதி அனுமதிப் பத்திரத்தை மீளக் கையளிக்கவும் ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறினார்.
களனி மேம்பாலம் பிரதேசத்தில் இலஞ்சத் தொகையைப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் நேற்று மாலை இந்தப் பொலிஸ் சார்ஜன் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
No comments:
Post a Comment