Saturday, March 03, 2012பெங்களூரு::பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்த கலவரத்திற்கிடையில், சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி, 16 கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வெளியே செல்ல முடியாமல், ஒரு மணி நேரம் காத்திருந்த சசிகலா, கோர்ட்டின் பின்புறம் வழியாக, "பாதுகாப்பாக' வெளியேறினார். அடுத்த கட்ட விசாரணை மார்ச் 7ம் தேதி நடக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
சசிகலாவும், சுதாகரனும் ஆஜராயினர். சசிகலாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:
திரு.வி.க., நகர் தொழிற்பேட்டையில், சசிகலாவுக்கு சொந்தமான நான்கு ஷெட்களின் மதிப்பு, மந்தைவெளியில் உள்ள வீடு புதுப்பிக்கப்பட்டது, சென்னை ஜே.எம்.பிளாஸாவின் கடை வாடகைக்கு எடுத்தது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. மதிப்பீடு அதிகமாகப் போடப்பட்டுள்ளதாக சசிகலா பதிலளித்தார்.
சூப்பர் டூப்பர் கம்பெனி, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் போன்ற சில நிறுவனங்களுக்கு வருமான வரி செலுத்தும்போது நீங்கள் கையெழுத்திட்டீர்களா, ஜெயா பப்ளிகேஷன் நிறுவன முகவரிக்கு போயஸ் கார்டன் முகவரி கொடுக்கப்பட்டுள்ளதா. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், தினகரன் ஆகியோர் பங்குதாரர்களா?
ஆம்.விசாரணை அதிகாரி நல்லம்மநாயுடு தலைமையில் போயஸ் கார்டன் வீட்டில் சோதனையிட்டது தெரியுமா?தெரியாது.
போயஸ் கார்டன் வீட்டிலிருந்து விசாரணைக்கு பின்னர், 97 நகைப்பெட்டியில், 91 லட்சத்து 71 ஆயிரத்து 571 ரூபாய் மதிப்புள்ள, 25.113 கிலோ எடையுள்ள தங்க நகைகளும். இரண்டு கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளும் கைப்பற்றினர். இதன் மதிப்பு மூன்று கோடியே 35 லட்சத்து 50ஆயிரத்து 43 ரூபாய் என மதிப்பீடு செய்துள்ளது தெரியுமா?
போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடந்தபோது, ஜெயலலிதாவும், நானும் சிறையில் இருந்தோம். எங்கள் முன்னிலையில் சோதனை நடக்கவில்லை. வீட்டின் உரிமையாளர் ஜெயலலிதா இருக்கும்போது, சோதனை நடந்திருக்க வேண்டும். சோதனையின்போது, பணியாளர்களை கார் ஷெட்டில் அமர வைத்துவிட்டு, அதிகாரிகளை வைத்து சோதனை செய்தனர்.
சுங்கத் துறை ஊழியர் வாதேவனை வைத்து, தங்கத்தின் தரத்தை மதிப்பீடு செய்தனர். அவர் மதிப்பீட்டாளர் அல்ல. அவரை வைத்து மதிப்பீடு செய்ததே மிக, மிக தவறாகும். இவரது மதிப்பீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. சரியாக மதிப்பீடு செய்ய வேண்டுமானால், சென்னை வருமான வரித்துறையினரின் அனுமதி பெற்று, மதிப்பீடு செய்யும் நகைக்கடை மதிப்பீட்டாளர்களை வைத்துத்தான் மதிப்பீடு செய்திருக்க வேண்டும்.
நகைகளை எடைபோடும் இயந்திரம், வருமான வரித்துறையினர் தேர்வு செய்ததாக இருந்திருக்கவேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றபடவில்லை.
ஜெயலலிதா பெயரைக் கெடுக்க வேண்டும் என போலீசார் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட நகைகள், ஜெயலலிதா மற்றும் என்னுடையது மட்டும் அல்ல. வேறு சிலரின் நகைகளும் இருந்தன. நாங்கள் வைத்திருந்த நகை, சொத்துகளுக்கு, 1990 முதல் வருமான வரி செலுத்தியுள்ளோம். மேலும் விவரங்களை எழுத்து மூலம் தருகிறேன்.
வீடு நம்பர் 31.ஏ.,போயஸ் கார்டன் வீட்டில் இருந்து 42 நகை பெட்டியில், 17லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய் மதிப்புள்ள, 4.475 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 30 லட்சத்து 24 ஆயிரத்து 550 ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் என, 47 லட்சத்து 61 ஆயிரத்து 860 ரூபாய் மதிப்புள்ள நகைகள் கைபற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அனுமதியின்றி சோதனை செய்தனர். எழுத்துப்பூர்வமாக பதில் தருகிறேன்.
இவ்வாறு நீதிபதியின் கேள்விக்கு சசிகலா பதிலளித்தார்.
இதையடுத்து, அடுத்த விசாரணை மார்ச் 7 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதுவரை
அவரிடம், 300 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நேற்று, 16 கேள்விகள் கேட்கப்பட்டன.
விசாரணை நடந்த கோர்ட் வளாகத்தில் கலவரம் நடந்ததால், சிறப்பு கோர்ட்டிலிருந்து சசிகலா, சுதாகரன், அவர்களின் வழக்கறிஞர்கள் வெளியே செல்ல முடியாமல் ஒரு மணி நேரம் காத்திருந்தனர். பின்னர், ஒரு வழியாக கோர்ட்டின் பின்புறம் வழியாக "பாதுகாப்பாக' வெளியேறினர்.
போட்டோகிராபர்களைகாட்டிக் கொடுத்தசசிகலா வக்கீல்!
பெங்களூரு::சசிகலாவை படம் எடுத்த பத்திரிகை போட்டோகிராபர்களை, கர்நாடக வழக்கறிஞர்களிடம், தமிழக வழக்கறிஞர் ஒருவர் காட்டிக் கொடுத்ததால், பரபரப்பு நிலவியது.பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்த விசாரணைக்கு ஆஜராக சசிகலா வந்தார். ஒரு சில தமிழ் பத்திரிகையாளர்கள், மீடியா போட்டோகிராபர்கள் மட்டும் படம் எடுத்தனர்.அப்போது, சசிகலாவுடன் வந்த தமிழக வழக்கறிஞர் ஒருவர், பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர்கள், போலீசாரை பார்த்து, "இங்கே பத்திரிகை போட்டோகிராபர்கள் உள்ளனர். அவர்களை விரட்டியடியுங்கள்' என சத்தமிட்டார். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.அப்போது, தமிழ் பத்திரிகை நிருபர் ஒருவர், இந்த வழக்கறிஞருக்கு ஏன் இந்த கொலை வெறி. தமிழனை தமிழனே காட்டிக் கொடுக்கிறான் என்றார்.
No comments:
Post a Comment