Tuesday, March 20, 2012

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உதயகுமார் எந்த நேரத்திலும் கைது ஆகலாம்: இடிந்தகரையில் பரபரப்பு!

Tuesday, March 20, 2012
வள்ளியூர்::கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தொடங்க தமிழக அரசு நேற்று அனுமதி அளித்தது. அரசின் இந்த முடிவுக்கு போராட்டக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடங்குளம் அருகே இடிந்தகரை தேவாலய வளாகத்தில் உள்ள உண்ணாவிரத பந்தலில், அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகி புஷ்பராயன் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக கூறி உடனடியாக போராட்டத்தை தொடங்கினர்.

இவர்களுக்கு ஆதரவாக கூடங்குளம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்தனர். சுமார் 3 ஆயிரம் பேர் போராட்ட பந்தலில் குவிந்தனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழக மக்களின் உயிருக்கு ஆபத்தானது என்றும், எனவே அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கடந்த 7 மாதங்களாக நாங்கள் பொதுச் சொத்துக்களுக்கோ, யாருக்கோ எந்த சேதமும் ஏற்படுத்தாமல் அகிம்சை முறையில் போராடி வந்தோம். எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த தமிழக போலீசார் திடீர் என்று, எங்கள் போராட்டக்குழுவை சேர்ந்தவர்களை கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய, மாநில அரசிடம் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் போராட்டத்தை புறந்தள்ளிவிட்டு இரும்புக்கரம் கொண்டு எங்களை ஒடுக்கி, அணுமின் நிலையத்தை திறந்தால் அது மனித உரிமையை மீறும் செயல் ஆகும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படவில்லை. எனவே இந்த பயிற்சியை முறையாக அளிக்காமல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எக்காரணம் கொண்டும் எரிபொருள் நிரப்பக்கூடாது. அதற்கு அனுமதிக்கமாட்டோம்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும். நாங்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நம்பிக்கை இழக்கவில்லை. மீண்டும் அவர் கூடங்குளம் பகுதி மக்களுக்கு குரல் கொடுப்பார் என்று நம்புகிறோம். தமிழக அமைச்சரவை முடிவையும், தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி நலத்திட்டங்களையும் ஏற்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர்பாக போலீசார் பதிந்துள்ள வழக்குகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அனுமதியின்றி நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் மொதத்தம் 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

போராட்டக்குழுவை சேர்ந்த அனைவரின் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராட்டக்குழுவை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது 55 வழக்குகளும், வக்கீல் சிவசுப்பிரமணியன் மீது 44 வழக்குகளும், போராட்டக்குழு உறுப்பினர் ரவி மீது 33 வழக்குகளும், கூடங்குளம் பஞ்சாயத்து தலைவர் சாண்டல் முத்துராஜ் மீது 33வழக்குகளும், பா.ஜ.க. நிர்வாகி ராஜலிங்கம் மீது 34வழக்குகளும், சேரன்மகாதேவி பாதிரியார் மைபா ஜேசுராஜன் மீது 22வழக்குகளும், கூட்டப்புளி பாதிரியார் சுசிலன், கூடங்குளம் பாதிரியார் சடேயூஸ்ராஜன் ஆகியோர் மீது தலா 4 வழக்குகளும், கூத்தங்குளி பாதிரியார் ரட்சகநாதன், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் ஆம்புரோஸ் ஆகியோர் மீது தலா 2வழக்குகளும், இடிந்தகரை போராட்டக்குழு சகாயராஜ் மீது 35வழக்குகளும்,கூடங்குளம் போராட்டக்குழு பெருமாள்சாமி மீது 19வழக்குகள், கிறிஸ்தவ மக்கள் இயக்க தலைவர் புஷ்பராயன் மீது 7வழக்குகள், சகாயஇனிதா மீது 36வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜேசுராஜன் ஆகிய 3பேர் மீதும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேசிய நலனுக்கு எதிராகவும் செயல்பட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆகையால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உதயகுமார் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இடிந்தகரையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

No comments:

Post a Comment