Wednesday, March 21, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை அதிமுக அமோக வெற்றி!

Wednesday,March,21,2012
நெல்லை::சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 8 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளரைவிட 31 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். இங்கு அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட கருப்பசாமி, 4-வது முறையாக வெற்றி பெற்றார். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். முதலில் கால்நடைத் துறை அமைச்சராகவும், பின்னர் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் பணியாற்றினார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார்.

கடந்த அக்டோபர் 21-ம் தேதி கருப்பசாமி காலமானார். இதைத் தொடர்ந்து சங்கரன்கோவில் தொகுதிக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதிமுக வேட்பாளராக முத்துச்செல்வியும் திமுக சார்பில் ஜவகர் சூரியகுமாரும் போட்டியிட்டனர். இவர்களைத் தவிர சதன் திருமலைக்குமார் (மதிமுக), முத்துக்குமார் (தேமுதிக), முருகன் (பா.ஜ.), நாகேஸ்வர ராவ் (சமாஜ்வாடி), கணேசன் (இந்திய ஜனநாயக கட்சி) மற்றும் 6 சுயேச்சைகளும் களத்தில் குதித்தனர்.

தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,06,087. இதில் 1,59,760 பேர் வாக்களித்தனர். மொத்தம் 77.52 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையமான புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவாகி இருந்த 16 ஓட்டுகளில் அதிமுகவுக்கு 13-ம் மதிமுகவுக்கு 3-ம் கிடைத்தன. பின்னர், மெஷினில் பதிவாகி இருந்த ஓட்டுகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். காலை 9 மணிக்கு முதல் சுற்று எண்ணி முடிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி, 6082 வாக்குகள் பெற்றார். ஜவகர் சூரியகுமார் (திமுக) - 1769, சதன் திருமலைக்குமார் (மதிமுக) - 1295, முத்துக்குமார் (தேமுதிக) - 656 வாக்குகள் பெற்றிருந்தனர். 2-வது சுற்றில் அதிமுக-12,289, திமுக-2784, மதிமுக-2758, தேமுதிக-1946 வாக்குகள் கிடைத்தன. 8-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு புளியங்குடி வீராசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செல்போன், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட எந்த பொருளும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் தவிர யாரும் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

முதல் பெண் எம்எல்ஏ
சங்கரன்கோவில் தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமை முத்துச்செல்விக்கு கிடைத்துள்ளது. 1957-ம் ஆண்டு முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்தித்தது சங்கரன்கோவில் தொகுதி. இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்து, 1962-ல் பொது தொகுதியாக மாறியது. இதுவரை இங்கு ஆண்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன்மூலம் தொகுதியில் முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமை முத்துச்செல்விக்கு கிடைத்துள்ளது. இவரது தந்தை சங்கரலிங்கம், 1984-ல் இதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டயிட்டு வெற்றி பெற்றவர்.

6-வது முறையாக அதிமுக

சங்கரன்கோவில் தொகுதி இதுவரை 13 தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆரம்பத்தில் காங்கிரஸ் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடந்த 3 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது. 1980, 84-ல் தொகுதி அதிமுக வசமானது. 1989-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்றது. 1991, 1996, 2001, 2006, 2011 ஆகிய 5 தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுகவே வென்றுள்ளது. இப்போது இடைத்தேர்தலிலும் 6-வது முறையாக தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment