Wednesday,March,21,2012வள்ளியூர்::கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதை தொடர்ந்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உறுப்பினர் புஷ்பராயன் ஆகியோரை கைது செய்ய இடிந்தகரையை இன்று காலை போலீசார் நெருங்கினர். அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசுக்கு ஒத்துழைத்து கைதாக உதயகுமார் முடிவு செய்த நிலையில் நாங்களும் உங்களுடன் கைதாவோம் என்று அங்கு கூடியிருக்கும் 5 ஆயிரம் பேர் ஆவேசமடைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்ததை தொடர்ந்து அங்கு வரலாறு காணாத போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. போராட்ட குழுவை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். அரசின் முடிவை கண்டித்து இடிந்தகரையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் உறுப்பினர் புஷ்பராயனும் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். இதனால் கூடங்குளம் மற்றும் கடலோர கிராமங்களில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இடிந்தகரைக்கு வரும் அனைத்து வழிகளிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சரண் அடைய வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை உதயகுமார் நிராகரித்தார். ‘எங்கள் இருவரை மட்டும் கைது செய்ய கிராம மக்கள் சம்மதிக்க மாட்டார்கள். எங்களுடன் 5 ஆயிரம் பேரையும் கைது செய்யுங்கள்’ என்று அவர் கூறியுள்ளார். எந்த நேரத்திலும் உண்ணாவிரத பந்தலுக்குள் போலீசார் நுழைந்து உதயகுமாரை கைது செய்யலாம் என தகவல் பரவியது. இதனால் அங்கு திரண்டிருந்த மக்கள், விடிய விடிய தூங்காமல் கண்காணித்தனர். போலீசாரை இடிந்தகரைக்குள் நுழைய விடாமல் தடுக்க சாலைகளில் முட்களை வெட்டி போட்டும் கற்களை குவித்தும் தடுப்பு அரண்களை ஏற்படுத்தினர்.
இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்து வரும் நிலையில் இடிந்தகரையில் மின்சப்ளை, குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டது. உதயகுமாருக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் இருந்து இடிந்தகரைக்கு 100 பைபர் படகுகளில் மக்கள் புறப்பட்டனர். அவர்களை கைது செய்ய சுமார் 200 போலீசார் கடற்கரை பகுதியில் முகாமிட்டுள்ளனர்.உதயகுமாரை கைது செய்து நேற்றே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் வியூகம் வகுத்தனர். உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட சிலரை கைது செய்ய முயன்றால் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால், போலீசார் நிதானமாக செயல்பட முடிவு செய்துள்ளனர். திருச்சியில் இருந்து சிறப்பு அதிரடிப்படையினர் 300 பேர், அதிநவீன ஆயுதங்களுடன் கூடங்குளம் வந்துள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஏடிஜிபி ஜார்ஜ் தலைமையில் தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், டிஐஜிக்கள் வரதராஜூ, ராமசுப்பிரமணியன், சஞ்சய் மாத்தூர் மற்றும் விஜயேந்திர பிதரி, ராஜேந்திரன், பிரவீன்குமார் அபிநவ் உள்ளிட்ட 10 எஸ்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உதயகுமாருக்கு போலீஸ் தரப்பில் இறுதி கெடு விதிக்கப்பட்டது. ‘உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும். அல்லது அப்புறப்படுத்தப்படுவீர்கள்’ என்று எச்சரிக்கை விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை 9.15 மணிக்கு அதிரடிப்படை, கலவர தடுப்பு படையினர் இடிந்தகரை அருகே உள்ள மைதானத்தில் குவிந்துள்ளனர். எந்த நேரத்திலும் உதயகுமார் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அசம்பாவிதத்தை தவிர்க்க தானாக முன்வந்து கைதாக உதயகுமார் முடிவெடுத்துள்ளதாகவும் அங்கு கூடியுள்ள மக்கள் இதற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ‘உங்களுடன் நாங்களும் கைதாவோம்’ என்று 5 ஆயிரம் பேரும் ஆவேசமாக கூறி வருவதால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
செல்போன் டவர் செயலிழப்பு
போராட்டக் குழுவினர் செல்போன் மூலம் பலரிடம் தொடர்பு கொள்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அங்குள்ள செல்போன் டவர்களை சம்பந்தப்பட்ட போன் நிறுவனங்களிடம் பேசி செயலிழக்க வைத்துள்ளனர். இதனால் போராட்டக் குழுவினரின் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிந்தகரைக்குள் நுழைய பத்திரிகையாளர், போட்டோகிராபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment