Wednesday, March 21, 2012

சவால் விட்டவர்களுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் - முதல்வர் ஜெயலலிதா!

Wednesday,March,21,2012
சென்னை::சவால் விட்டவர்களுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவு குறித்து பேசினார். அதில் சவால் விட்டவர்களுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்...

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அமைச்சர் மாதவரம் மூர்த்தி மகன் திருமணம், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் திருமணம் உள்பட 7 பேரின் திருமணங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்தார்.

பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசிய பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. முன்னணியில் உள்ளதே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுக்கு நான் 1989-ம் ஆண்டு தலைமை ஏற்றேன். அதன் பிறகு 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை சங்கரன் கோவில் தொகுதியில் நடைபெற்ற ஒவ்வெரு சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் வெற்றி பெறச்செய்துள்ளனர்.

நல்ல காலங்களிலும், சோதனை காலங்களிலும் சங்கரன்கோவில் தொகுதி மக்கள் அ.தி.மு.க.வை கைவிடவில்லை. எப்போதும் அ.தி.மு.க.வுக்கு துணை நிற்கிறார்கள். இப்போதும் அதே வெற்றியை தந்துள்ளனர். தேர்தல் முடிவு இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. ஆனாலும் மகத்தான வெற்றியை அ.தி.மு.க.வுக்கு தந்துள்ளனர்.

இதற்காக சங்கரன்கோவில் தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே இந்த தொகுதியில் வெற்றி பெறுவோம் என்பது தெரிந்த ஒன்றுதான். எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பதுதான் கேள்விக்குறியாக இருந்தது.

கேள்வி:- உங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் இந்த தேர்தலில் உங்களுடன் இல்லை. ஆனாலும் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதே?

பதில்:- நீங்களே சொல்லி விட்டீர்கள். நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி:- சட்டசபையிலும் வெளியிலும் உங்களுக்கு சவால் விட்டு சங்கரன்கோவில் தேர்தலில் பார்ப்போம் என்றார்களே. அவர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- அவர்களிடம் நீங்கள்தான் கேட்க வேண்டும். மற்றவர்கள் விட்ட சவாலுக்கு சங்கரன்கோவில் தொகுதி மக்கள் பதிலடி கொடுத்து விட்டார்கள்.

கேள்வி:- கூடங்குளத்தில் இன்னும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே?

பதில்:- கூடங்குளம் பிரச்சினை குறித்து ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்திருக்கிறேன். அங்குள்ள மக்களுக்கு ரூ. 500 கோடிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளேன். இதுதொடர்பாக அறிக்கையிலேயே விரிவாக அனைத்து விவரங்களையும் சொல்லி இருக்கிறேன். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment