Thursday, March 22, 2012

இடிந்தகரை செல்லும் அத்தியாவசியப் பொருட்களை தடுக்கவில்லை-டிஜிபி விளக்கம்!

Thursday, March 22, 2012
சென்னை::இடிந்தகரை அல்லது வேறு எந்தக் கிராமத்திற்கும் செல்லும் அத்தியாவசியப் பொருட்களை போலீஸார் தடுக்கவில்லை என்று மாநில காவல்துறை தலைவர் ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

இடிந்தகரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் உதயக்குமாரைக் கைது செய்ய போலீஸார் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மக்கள் புடை சூழ, கிறிஸ்தவ ஆலயத்திற்குள் அவர் அமர்ந்திருக்கிறார். இதனால் போலீஸார் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இடிந்தகரை கிராமத்தில் மின்விநியோகம், பால், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடை செய்யப்பட்டிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஊடகங்களும் இதுகுறித்து செய்தி வெளியிட்டன.

ஆனால் இதை டிஜிபி ராமானுஜம் மறுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை கிராமத்துக்கு குடிதண்ணீர், பால், காய்கறி முதலியவற்றை செல்லவிடாமல் காவல்துறையினர் தடுத்து வைத்திருப்பதாக, சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

அந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. அந்த கிராமத்துக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை காவல்துறை நிறுத்தவோ அல்லது தடுக்கவோ இல்லை.

கூடங்குளத்தில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு மட்டுமே காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனரே தவிர, இடிந்தகரைக்கோ அல்லது வேறு எந்த கிராமத்திற்கோ, அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லப்படுவதை தடுப்பதற்காக அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment