Friday, March,30, 2012இலங்கை::மக்கள் போராட்ட இயக்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவத்தின் சாட்சி விசாரணைகளை, யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நடத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இருவரும் காணாமல் போனமை தொடர்பில் அவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்கள் இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த இரண்டு இளைஞர்களும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்படவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ இல்லை என இதன்போது பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்தார்.
அவர்கள் கைதுசெய்யப்படவில்லை எனில் சம்பந்தப்பட்ட பிரதேச நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை ஆரம்பிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இதன்போது மனுதாரர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்தார்.
எவ்வாறாயினும் இந்த வழக்கின் பிரதிவாதிகளான பொலிஸ் மா அதிபர் மற்றும் அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் இதுவரையில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்காத காரணத்தினால், அந்தத் தீர்மானத்தை சாட்சியமளித்ததன் பின்னர் எடுக்க வேண்டும் என பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
காரணங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், குறித்த சாட்சி விசாரணைகளை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதன் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அடுத்த மாதம் 27 ஆம் திகதி மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்த நீதிபதிகள் குழாம், குறித்த தினம் பிரதிவாதிகளின் எதிர்ப்புகளை முன்வைக்க முடியுமெனக் குறிப்பிட்டார்.
குகன் முருகானந்தன் மற்றும் லலித் குமார ஆகிய மக்கள் போரட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ்பாணத்தில் காணாமற்போனமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment