Tuesday, March 20, 2012

உ.பி.யில் வேன் மீது பயணிகள் ரயில் மோதி 15 பேர் பலி

Tuesday, March 20, 2012
ஹத்ராஸ்::உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியில் வேன் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த 15 பேர் பலியாகினர்.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியிஸ் டாடா மேஜிக் வேனில் 15 முதல் 19 பேர் பயணம் செய்தனர். அந்த வேன் இன்று காலை ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த மதுரா-காஸ்கஞ்ச் பயணிகள் ரயிலை வேன் டிரைவர் கவனிக்கவில்லை. இதையடுத்து வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். பலியானவர்களில் வேன் டிரைவரும் அடக்கம். இதில் படுகாயமடைந்த 2 பேர் அலிகாரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து ரயில்வே துறையோ, மாவட்ட நிர்வாகமோ இன்னும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. நாட்டில் உள்ள 32,735 ரயில்வே கிராசிங்களில் 14, 896 ஆளில்லா கிராசிங்களாகும். கடந்த 2010-11ம் ஆண்டில் இந்த ஆளில்லா கிராசிங்களை கடக்க முயன்று 229 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2015ம் ஆண்டிற்குள் அனைத்து ஆளில்லா ரயில்வே கிராசிங்களை அகற்ற திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment