Friday, March 2, 2012

அடுத்த ஆண்டு சர்வீஸ் தொடக்கம் ரூ 1 கோடியில் விண்வெளி டூர்:-2050-ல் லிப்ட்!!

Friday, March 02, 2012
லண்டன்::விண்வெளி டூர் சர்வீஸ் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் கூறியுள்ளது. வர்ஜின் குழுமம் லண்டனை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. மதுபானம், வீடியோகேம், எலக்ட்ரானிக்ஸ், செல்போன், அழகுசாதன பொருட்கள், விமான போக்குவரத்து என பல துறைகளில் கால்பதித்த நிறுவனம். விண்வெளிக்கு மக்களை அழைத்து போகும் நோக்கில் ‘வர்ஜின் கேலக்டிக்’ என்ற நிறுவனத்தை இக்குழுமம் 2004-ல் தொடங்கியது. விண்வெளி ஆராய்ச்சி, கல்வி, சுற்றுலா நோக்கிலான விண்கலங்களை இந்நிறுவனம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. விண்வெளி சுற்றுலா சேவை அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என தற்போது அறிவித்துள்ளது. இதுபற்றி வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் துணை தலைவர் வில்லியம் போமரன்ஸ் கூறியதாவது: வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் ஸ்பேஸ்ஷிப்-2 மூலம் பயணிகள் விண்வெளிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். விண்கலத்தில் 6 பயணிகள், 2 பைலட்கள் செல்ல முடியும். பூமியில் இருந்து சுமார் 108 கி.மீ. உயரத்துக்கு சென்று வருகிற வகையில் இந்த விண்கலம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. விண்வெளி சுற்றுலாவுக்கு 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு நபருக்கு கட்டணம் ரூ.1 கோடி. விண்கலத்தின் முதல்கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. ராக்கெட்கள் பொருத்தி விண்கலத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விண்வெளி சுற்றுலா சேவை அடுத்த ஆண்டு அல்லது 2014-ல் தொடங்கிவிடும். இவ்வாறு வில்லியம் தெரிவித்தார்.

2050-ல் லிப்ட்

50 மாடி, 100 மாடி லிப்ட் கேள்விப்பட்டிருக்கலாம். விண்வெளிக்கு, அதாவது சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு லிப்ட் அமைப்பது குறித்து ஜப்பானின் ஒபயாஷி நிறுவன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஸ்டீலைவிட 20 மடங்கு உறுதியான கார்பன் நானோ டியூப் பயன்படுத்தி, பூமியில் இருந்து சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு ஒரு பிரமாண்ட போஸ்ட் நடவேண்டும். அதன் உச்சியில் ஆய்வு மையம் மற்றும் சுற்றுலா தலம் அமைக்கப்படும். போஸ்ட்டின் உச்சிக்கு லிப்ட்டிலேயே போகலாம். இந்த லிப்ட் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு நேரத்தில் 30 பயணிகள் சென்றுவர முடியும். ஆராய்ச்சியை தீவிரப்படுத்தினால், 2050-ம் ஆண்டுக்குள் விண்வெளி லிப்ட் ரெடி என்று சர்வசாதாரணமாக சொல்கிறார் ஆய்வு நிறுவனத்தின் தலைவி ஒபயாஷி.

No comments:

Post a Comment