Thursday, March 1, 2012

எம்.கே.பி. நகரில் ரூ 1 கோடி கேட்டு கடத்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவன் இன்று அதிகாலை மீட்பு : துப்பாக்கிகளுடன் உ.பி. வாலிபர்கள் கைது!

Thursday, March 01, 2012
பெரம்பூர்::எம்.கே.பி. நகரில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவன் மீட்கப்பட்டான். இது தொடர்பாக கல்லூரி மாணவர், உ.பி. வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் அடுத்த எம்.கே.பி. நகர் 12-வது மேற்கு குறுக்கு தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன். பெருங்குடியில் இரும்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு 4 மகன்கள். இரண்டாவது மகன் யுவராஜ் (17), பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 26-ம் தேதி அம்மாவிடம் 100 ரூபாய் வாங்கிக் கொண்டு வெளியே சென்ற யுவராஜ், பின்னர் வீடு திரும்பவில்லை. இரவு வெகுநேரமாகியும் மகன் வராததால் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தனர். எந்த தகவலும் கிடைக்காததால் மறுநாள் எம்.கே.பி.நகர் போலீசில் கிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர்.
இந்நிலையில், கிருஷ் ணன் செல்போனுக்கு நேற்றிரவு 8.30 மணியளவில் ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, ‘உன் மகனை நாங்கள்தான் கடத்தி வைத்துள்ளோம். ரூ.1 கோடி கொடுத்தால் அவனை விடுகிறோம். இல்லாவிட்டால் உன் மகனை கொலை செய்து விடுவோம்’ என மிரட்டிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டான்.

அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். புளியந்தோப்பு துணை கமிஷனர் கார்த்திகேயன், எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் கோவி.மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மிரட்டல் வந்த செல்போன் எண் யாருடையது என தனிப்படை போலீசார் விசாரித்தனர். அது, கொடுங்கையூர் எவரடி காலனி 14-வது தெருவில் வசிக்கும் விஜி (எ) விஜயகுமார் (19) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் விஜி வீட்டை தனிப்படை போலீசார், துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்தனர். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அதிரடியாக கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கடத்தப்பட்ட மாணவன் யுவராஜ் நடுங்கியபடி இருந்தான். வீட்டில் இருந்த கல்லூரி மாணவர் விஜி மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் அசாம்கான் (28), அன்வர்கான் (27) ஆகியோரை போலீசார் பிடித்தனர். வீட்டில் சோதனை நடத்தியபோது 4 கைத்துப்பாக்கிகள், 17 தோட்டாக்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது: விஜி, ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து வருகிறார். இவர் நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் பாண்டியன் மகன். மகன் தங்கி படிப்பதற்காக கொடுங்கையூரில் சொந்த வீடு வாங்கி கொடுத்துள்ளார். அங்கிருந்தான் விஜி தினமும் கல்லூரிக்கு சென்று வருகிறார்.

அசாம்கான், அன்வர்கானின் தந்தை முஷரப் கான், உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். சென்னையில் பதுங்கியிருந்த அவரை மாதவரம் போலீசார் உதவியுடன் உ.பி. போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர். அந்த கொலையில் அசாம்கான், அன்வர்கானுக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரிக்கின்றனர். வீட்டில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வங்கிகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார்களா? கல்லூரி மாணவருக்கு உ.பி.யை சேர்ந்தவர்களுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது? தொழில் போட்டியால் மாணவனை கடத்தினார்களா அல்லது மிரட்டி பணம் பறிக்கும் எண்ணத்தில் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் வடமாநிலத்தை சேர்ந்த வங்கி கொள்ளையர்கள் 5 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இப்போது மாணவன் கடத்தல் வழக்கில் துப்பாக்கிகளுடன் உ.பி.யை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவன் மீது சந்தேகம்: கடத்தப்பட்ட பள்ளி மாணவனை அவனது வீடு அருகே ஒரு கி.மீ. தொலைவிலேயே அடைத்து வைத்திருந்தனர். நான்கு நாட்களாக அவர்களுடனேயே யுவராஜ் தங்கியுள்ளான். உண்மையிலேயே கடத்தப்பட்டிருந்தால் சத்தம் போட்டிருப்பான். சத்தம் போட்டிருந்தால் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு நிச்சயம் கேட்டிருக்கும். போலீசாருக்கும் உடனே தகவல் சென்றிருக்கும். 4 நாட்களாக தங்கியிருந்த அவன், எந்த சத்தமும் போடவில்லை. மிரட்டலுக்கு பயந்து சத்தம் போடாமல் இருந்தானா அல்லது கடத்தலுக்கு அவனும் உடந்தையாக இருந்தானா என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மாணவனை கடத்தி ரூ.1 கோடி கேட்டது ஏன்? இன்ஜி. மாணவர் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை : ஜாலியாக செலவு செய்த மாணவனின் பெற்றோரிடம் பணம் அதிகமாக இருக்கும் என்ற சந்தேகத்தில்தான் அவனை கடத்தி ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டினோம் என்று கைது செய்யப்பட்ட இன்ஜினியரிங் மாணவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். மாணவன் யுவராஜ் கடத்தலில் கைது செய்யப்பட்ட இன்ஜினியரிங் மாணவர் விஜயகுமார், போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்: எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம். அப்பா இறந்துவிட்டார். அம்மா, தம்பி, தங்கைகள் நெல்லையில் வசிக்கின்றனர். அப்பா, வட்டி தொழில் செய்து வந்தார். சென்னையில் எங்களுக்கு சொந்தமான வீட்டில் தங்கி, ஆவடியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மெக்கானிக் பிரிவில் படித்து வந்தேன். அப்போதுதான், ஒரு நண்பர் மூலம் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அசம்கான், அவரது தம்பி அன்வர்கான் பழக்கமாயினர். தன்னிடம் ரிவால்வர் இருப்பதாக அசம்கான் கூறினார். அவரது அப்பா முஷரப் கான், 20 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தார். பின்னர் குடும்பத்துடன் சென்னை வந்தவர், செங்குன்றம் பகுதியில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வந்தார். கடந்த ஆண்டு முஷரப்கானை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அதன்பின், கம்பெனியை அவரது மனைவிதான் கவனித்து வந்தார். அவருக்கு அசம்கான் உதவி செய்து வந்தார்.

என் வீட்டுக்கு அசம்கான் அடிக்கடி வந்து செல்வார். நான் தனியாக இருந்ததால், அவரது நட்பை பெரிதாக கருதினேன். அப்போது, எனது நண்பர் வசந்த் மூலமாக யுவராஜ் அறிமுகமானான். வசந்த், அருகில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறான். யுவராஜிடம் எப்போதும் ஆயிரக்கணக்கில் பணம் இருக்கும். நண்பர்களை ஓட்டல், பேக்கரிக்கு அழைத்து சென்று கேட்டதை வாங்கித் தருவான். பணத்தை ஜாலியாக செலவு செய்வான் என்று வசந்த் தெரிவித்தான். இதனால், அவனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டோம். அவனை எங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வசந்த்திடம் கூறினோம். அவனும் யுவராஜை எங்களுக்கு அறிமுகப்படுத்தினான். கடந்த 26-ம் தேதி யுவராஜை வீட்டுக்கு அழைத்து வந்தோம். 2 நாட்கள் எம்ஜிஎம், மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று சுற்றினோம். சென்னை திரும்பியதும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று யுவராஜ் கூறினான். அவனை துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப் போட்டோம். போலியான முகவரியில் ஒரு சிம்கார்டு வாங்கி, அதன்மூலம் ஒரு கோடி ரூபாய் கேட்டு யுவராஜ் அப்பாவை மிரட்டினோம். போலீசார் பிடித்து விடக் கூடாது என்பதற்காக சிம்கார்டை தூக்கி போட்டுவிட்டோம். ஆனாலும், போலீசார் எங்களை பிடித்து விட்டனர். பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி செய்து விட்டோம். இவ்வாறு விஜயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment