Thursday, February 16, 2012

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வீடுகளில் சோதனை!

Thursday, February 16, 2012
அருப்புக்கோட்டை::திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு சொந்தமான வீடு மற்றும் அவரது உறவினர், உதவியாளர் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. கடந்த சட்டசபை தேர்தலில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ.வானார்.

இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு. இங்குள்ள வீட்டில் நேற்று காலை 6.50 மணிக்கு தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ரங்கராஜன் தலைமையில் வந்த போலீசார் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். சோதனையின்போது தங்கம் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே இருந்தனர்.
குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துக்கள், வங்கி இருப்பு உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும், ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். போலீசார் உள்ளே நுழைந்ததும் வீட்டின் கதவுகள் மூடப்பட்டன. உள்ளேயும், வெளியேயும் யாரையும் அனுமதிக்கவில்லை. இதேபோல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள தங்கம் தென்னரசுவின் வீட்டிலும் சோதனை நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வெரியப்பூர் அருகே உள்ள காளிபாளையத்தில் தங்கம் தென்னரசுவின் மாமனார் முத்துச்சாமி வீட்டிலும் சோதனை நடந்தது. அதேபோல, மதுரை கே.கே.நகரில் உள்ள தங்கம் தென்னரசின் உதவியாளர் பாலகுருவின் வீட்டில் புதுக்கோட்டை டிஎஸ்பி ரத்தினவேலு தலைமையில் சோதனை நடந்தது. நண்பகல் 12 மணிக்கு சோதனை முடித்து போலீசார் வெளியில் வந்தனர்.

சோதனை குறித்து டிஎஸ்பி ரத்தினவேலுவிடம் கேட்ட போது, ‘இப்போதைக்கு எதுவும் கூற முடியாது' என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினார். காரியாபட்டியில் உள்ள பாலகுருவின் தம்பி செந்தில்குமார் வீட்டில் சிவகங்கை டிஎஸ்பி அருளானந்தம் தலைமையில் சோதனை நடந்தது. தங்கம் தென்னரசுவின் ஆதரவாளரும், நரிக்குடி ஒன்றிய திமுக செயலாளருமான கவுன்சிலர் போஸ் வீட்டில் கன்னியாகுமரி டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

தங்கம் தென்னரசு வீட்டில் போலீசார் சோதனை நடத்துவதாக வந்த தகவலை அடுத்து, திமுகவினர் அங்கு குவியத் துவங்கினர். முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் காலை 10 மணிக்கு தங்கம் தென்னரசுவின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவரது தலைமையில் திமுகவினர் அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பழிவாங்குவதில் மட்டுமே கவனம்’

சோதனை குறித்து தங்கம் தென்னரசு கூறுகையில், ‘'அதிமுக அரசு தொடர்ந்து திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 9 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை உள்ளது. தொழில்கள் அனைத்தும் நலிவடைந்து விட்டன. தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி முறையாக போய் சேரவில்லை. சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போய் விட்டது. இதையெல்லாம் சரிசெய்யாமல் திமுகவினர் மீது அடக்குமுறைகளை அரசு ஏவி விடுகிறது. இதற்கெல்லாம் அஞ்சிவிடாமல் சட்டப்பூர்வமாக இதனை எதிர்கொள்வோம்' என்றார்.

No comments:

Post a Comment