Thursday, February 16, 2012

சிலாபத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது; பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது!

Thursday, February 16, 2012
இலங்கை::நேற்றிரவு முதல் சிலாபம் நகரில் அமுலில் இருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்தனர். இதனையடுத்து பிரதேசத்தில் அமைதியின்மை எற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று பிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய சம்பவத்தில் உயிரிழந்தவர் தொரடர்பாக குறித்த குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள் நிறைவு பெற்றவுடன் சம்பவம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்டத்தையும் அமைதியையும் பாதுகாப்பதற்கு மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment