Tuesday, February 14, 2012

முந்தி செல்ல வழி கொடுக்காததால் ஆத்திரம் கார் மீது சரமாரி துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்!

Tuesday, February 14, 2012
பெங்களூர்::முந்தி செல்ல முயன்ற காருக்கு வழிவிடாத கார் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் பெங்களூரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெங்களூர் வயலிகாவல் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜூ. இவர், பெங்களூர் அருகே உள்ள கனகபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த ஒரு இறுதி சடங்கு நிகழ்ச்சியில் மனைவி அம்பிகா, 3 குழந்தைகளுடன் கலந்து கொண்டார். பின்னர் இரவில் அனைவரும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சதாசிவநகர் பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கார் அவர்கள் காரை முந்தி செல்ல முயன்றது. ஆனால் அந்த காருக்கு உடனடியாக வழி கொடுக்கவில்லை. இதனால் ஹார்ன் அடித்தபடி பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. வழி கொடுக்காததால் கடும் ஆத்திரமடைந்த ஹோண்டா கார் டிரைவர் துப்பாக்கியை எடுத்து லிங்கராஜூ கார் மீது 3 ரவுண்டுகள் சுட்டார். இதில் காரில் இருந்த லிங்கராஜூவின் 13 வயது மகன் நிதின் நெற்றியின் இடதுபுறத்தில் குண்டு பாய்ந்தது. பின்னர் ஹோண்டா கார் படுவேகத்தில் பறந்து மறைந்தது.

படுகாயமடைந்த நிதினை பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவனுக்கு அங்கு சிறிய ஆபரேஷன் மூலம் குண்டு அகற்றப்பட்டது. சைக்கிள் குண்டு போல அது இருந்தது. இச்சம்பவம் குறித்து லிங்கராஜூ போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து சிறுவனை சுட்ட கார் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர். ஏர்ரைபிள் மூலம் சுட்டது தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்தது. பெங்களூரில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம், அங்குள்ள ஈஸ்ட் எண்ட் சாலையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று அவர்கள் பைக் மீது மோதியது. இதில் ஏற்பட்ட மோதலில், கார் மீது கற்களை வீசிவிட்டு வாலிபர்கள் பைக்கில் பறந்தனர். அவர்களை விரட்டி மடக்கி கத்தியால் குத்திவிட்டு காரில் இருந்தவர்கள் தப்பினர். தீவிர சிகிச்சைக்கு பின் வாலிபர்கள் உயிர் பிழைத்தனர். தற்போது போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment