Tuesday, February 21, 2012

வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில் பணியாற்ற தடை : ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Tuesday, February 21, 2012
சென்னை::வெளிநாட்டு வக்கீல்கள் இந்திய கோர்ட்டுகளில் ஆஜராகி வாதாட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஐகோர்ட்டில் வக்கீல் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
அமெரிக்கா உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த வக்கீல்கள் இந்திய கோர்ட்களில் தற்போது வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார்கள். இது இந்திய பார்கவுன்சில் சட்டத்துக்கு விரோதமானது. இந்திய பார்கவுன்சில் சட்டப்படி இங்குள்ள பார்கவுன்சில்களில் பதிவு செய்துள்ள வக்கீல்கள் மட்டுமே இந்திய கோர்ட்களில் வாதாட முடியும். இதை மீறி வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சட்ட ஆலோசகராக வெளிநாட்டில் பதிவு செய்துள்ள வக்கீல்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அவர்கள் இந்திய கோர்ட்களில் ஆஜராகி வருகிறார்கள். இது தவிர வெளிநாட்டில் பதிவு செய்துள்ள வக்கீல்கள் இந்தியாவில் சட்டநிறுவனங்களும் தொடங்கி வருகிறார்கள். இதுவரை 30க்கும் மேற்பட்ட சட்டநிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி உள்ளன. இதற்கு தடை கோரி மத்திய அரசுக்கு மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு கடந்த மாதம் இறுதி விசாரணை நடத்தப்பட்டது. மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் சுந்தரேசன், மத்திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன், மத்திய அரசின் மூத்த வக்கீல் பி.சந்திரசேகர் ஆகியோர் ஆஜரானார்கள். இதை தொடர்ந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பு விவரம்: வெளிநாடுகளில் சட்டம் படித்தவர்கள் இந்திய கோர்ட்களில் வாதாட அனுமதிக்க முடியாது. பார்கவுன்சில் சட்டப்படி இந்தியாவில் படித்து பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்திய கோர்ட்களில் ஆஜராகி வாதாட முடியும். இந்த சட்டம் சரியானது தான். வெளிநாட்டில் படித்தவர்கள் இந்திய கோர்ட்களில் வாதாடினால் அவர்கள் மீது பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்கலாம். வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கு சட்டப்பிரச்னை ஏற்பட்டால் அதற்கு ஆலோசனை மட்டும் வழங்க வெளிநாட்டு வக்கீல்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு அனுமதி கொடுக்கிறோம்.

No comments:

Post a Comment