Tuesday, February 21, 2012சென்னை::சென்னையில் 2 வங்கிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை கண்டதும் சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம் கீழ்கட்டளை மேடவாக்கம் பிரதான சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளர் சண்முகசுந்தரம். இவர், நேற்று பிற்பகலில் வங்கியில் இருந்தார். 1.30 மணி என்பதால், பல ஊழியர்கள் சாப்பிடச் சென்றனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் வந்தது. திடீரென்று 2 பேர் துப்பாக்கியை எடுத்து ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் மிரட்டினர். ஒருவர், மேலாளரை துப்பாக்கியை காட்டி மிரட்டினார். பின் ரூ.14 லட்சத்தை எடுத்து பையில் போட்டுள்ளனர். பிற்பகல் 2.30 மணிக்கு வங்கியில் இருந்து வெளியில் வந்தனர். தாங்கள் தயாராக கொண்டு வந்த காரில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டன. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. சென்னை அடுத்த பெருங்குடியில் ரூ.24 லட்சத்தை கடந்த மாதம் 23ம் தேதி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றனர். இப்போது 29 நாளில் அடுத்த கொள்ளை சம்பவம் துப்பாக்கி முனையில் நடந்துள்ளது. இரண்டு சம்பவங்களும் ஒன்றுபோல நடந்துள்ளது.
மடிப்பாக்கம் வங்கியில் கொள்ளையர்களைப் பார்த்த ஊழியர்கள், பொதுமக்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். பெருங்குடியில் நடந்த வங்கிக் கொள்ளையில் வங்கியில் செக்யூரிட்டி, சிசிடிவி கேமரா இல்லை. அதேபோல இந்த வங்கியிலும் இல்லை. இதைத் தெரிந்து கொண்ட கொள்ளையர்கள்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இரு கொள்ளையும் திங்கள்கிழமைதான் நடந்துள்ளது. இரண்டு சம்பவத்திலும் 5 பேர் கொள்ளையடித்துள்ளனர். அதில் 2 பேர் துப்பாக்கி வைத்திருந்தனர். பாதுகாப்பு இல்லாத ஒரே மாதிரியான வங்கிகள், தப்பிச் செல்ல வசதியாக சாலை வசதி என்று அனைத்துமே இரு கொள்ளையிலும் ஒன்றுபோல நடந்துள்ளன.
இதனால் ஒரே கொள்ளை கும்பல்தான் இந்தக் கொள்ளைகளில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பழைய கொள்ளைச் சம்பவத்தின்போது கம்ப்யூட்டர் மூலம் வரைந்த கொள்ளையர்களின் படத்தை போலீசார், மடிப்பாக்கம் வங்கி ஊழியர்களிடம் காட்டினர். ஏறக்குறைய இந்த கொள்ளையர்களின் முகமும் அதேபோல¢ இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். 29 நாளில் 2 வங்கிகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால், அந்தக் கும்பல் சென்னை அல்லது புறநகரில் தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கொள்ளையர்கள் இந்தியில் பேசியுள்ளனர். விசாரணையை திசை திருப்புவதற்காக அவ்வாறுபேசியிருக்கலாம். குறிப்பாக ஆந்திராவை சேர்ந்த பலர் எளிதாக இந்தி பேசக் கூடியவர்கள். இதனால் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொள்ளையர்கள் துப்பாக்கியை வைத்துள்ளனர். அதனால் கொள்ளையர்களை சுட¢டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொள்ளையர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர், கொள்ளை நடந்த பகுதியில் கொள்ளையர்கள் செல்போன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளதால், அந்தப் பகுதியில் இருந்து யாரெல்லாம் நேற்று செல்போனில் பேசியுள்ளனர் என்ற பட்டியலை எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment