Thursday, February 16, 2012சென்னை::தமிழக வருவாய் ஆவணங்களின் படி கச்சதீவு தமிழகத்திற்கு சொந்தமான பகுதி என்பதால், இலங்கைக்கு வழங்கப்பட்ட அந்தத் தீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டதாக சன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு சொந்தமாகவிருந்த கச்சதீவை இலங்கைக்கு வழங்குவதற்கு முன்னதாக, மத்திய அரசு தமிழக அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்டதால் தமிழக மீனவர்களின் பாராம்பரிய உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக வருவாய்துறை ஆவணங்களின் படி கச்சதீவு தமிழகத்திற்கு சொந்தமான பகுதி என்பதால், அந்தத் தீவை இலங்கைக்கு வழங்கியமை செல்லுபடியாகாது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு விட்டதால், பாக்கு நீரினைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும்போது தாக்குதலுக்கு இலக்காக நேரிடுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே தமிழகத்திற்கு சொந்தமான பகுதியை மீட்க மத்தியரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமை கிடையாது என்றும், வலைகளை மட்டுமே காயவைக்கலாம் என்றும், கடந்த வாரம் மத்தியரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு தமது புது விளக்கத்தை முன்வைத்துள்ளது.
No comments:
Post a Comment