Thursday, February 23, 2012சென்னை::சென்னை கீழ் கட்டளையில் நடைபெற்ற கொள்ளையில் வடமாநிலத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் ரயில் நிலையங்களை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம் என்று ரயில்வே போலீசார் தெரிவித்தனர். சென்னை கீழ்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்தது. இதில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. அதுமட்டுமின்றி ஜனவரி 23ம் தேதி பெருங்குடியில் உள்ள பரோடா வங்கியில் இதே கும்பல் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது. திருப்பூர் நகைக்கடை கொள்ளையிலும் வடமாநிலத்தவர்களையே சந்தேகிப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ள கும்பல் ரயில் மூலம் தப்பிச் செல்வதை தடுக்க சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அதிரடி சோதனை நடப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தமிழக ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு சம்பவத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றார்கள் என்பதற்காக அந்த சமூகத்தை சேர்ந்த எல்லோரையும் சந்தேகப்பட முடியாது. உண்மையில் பிழைப்பை தேடி வடமாநிலத்தில் இருந்து வரும் அப்பாவி ஏழைகளும் இருக்கின்றனர். எல்லோரையும் ஒரே பார்வையில் அணுகுவது வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
வங்கி கொள்ளை தொடர்பாக ரயில் நிலையங்களுக்கு வரும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நாங்கள் சோதனை செய்யவில்லை. அவ்வாறு சோதனை செய்யும்படி எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை. முக்கிய ரயில் நிலையங்களை மட்டுமின்றி மற்ற ரயில் நிலையங்களையும் கண்காணிப்பில் வைத்திருப்பது வழக்கம். அதேநேரத்தில் எல்லா ரயில் நிலையங்களையும் கடந்த 2 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சந்தேகப்படும் ஆட்களை வழக்கம் போல் விசாரித்து வருகிறோம். புறநகர் ரயில்நிலையங்களையும் இந்த கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment