Friday, February 17, 2012

கூடங்குளம் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தமிழக நிபுணர் குழு இன்று ஆலோசனை : ரஷ்ய விஞ்ஞானிகள் முடிவில் திடீர் மாற்றம்!

Friday, February 17, 2012
சென்னை::கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை குறித்து ஆராய தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் முதல் கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. அக்குழுவின் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி செலவில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் கடந்த டிசம்பர் மாதமே மின் உற்பத்தி துவங்க இருந்தது. இந்நிலையில், அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீரென மறியல், பேரணி, முற்றுகை என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அணு மின் நிலையத்தில் தற்போது அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. இதற்கிடையே, மின் பற்றாக்குறையால் தமிழகத்தில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு தற்போது 8 மணி நேரமாக அதிகரித்துள்ளது. பல இடங்களில் 11 மணி நேர மின்வெட்டும் அமல்படுத்தப்படுகிறது. மின்வெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும் வீதிக்கு வந்து போராட துவங்கியுள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் நெருங்கும் நிலையில், மாணவர்களும் படிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

கூடங்குளம் மின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியனை அமைப்பாளராக கொண்டுள்ள இந்த குழுவில் அணுசக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன், அண¢ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவு ஒளி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அணுமின் நிலையத்தை திறக்காவிட்டால், கூடங்குளத்தில் உள்ள எங்கள் விஞ்ஞானிகளை திரும்ப பெறுவோம் என மத்திய அரசுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. அப்போது, கூடங்குளம் விவகாரத்தில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, யார், யாரை சந்தித்து பேசுவது, போராட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை இக்குழு எடுக்கும் என கூறப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, கூடங்குளம் குறித்த அறிக்கையை தயாரிப்பது குறித்தும் குழுவினர் முடிவு செய்கின்றனர்.

அதே நேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. தொடர் போராட்டங்களால் கடந்த 4 மாதமாக ரஷ்ய விஞ்ஞானிகள் எந்த வேலையும் இல்லாமல், அணு விஜய் குடியிருப்பில் குடும்பத்துடன் முடங்கிக் கிடக்கின்றனர். ஒப்பந்த பணியாளர்களும் வேலையின்றி ஊரை காலி செய்துவிட்டனர். அவசர பராமரிப்பு பணிகள் மட்டுமே அவ்வப்போது நடந்து வருகிறது. அதற்காக தங்கியுள்ள சில பணியாளர்கள், யுரேனியத்தை பாதுகாக்கும் பணியை மட்டும் செய்து வருகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அத்தியாவசிய பணிக்கு செல்பவர்களை நேற்று இரவு போராட்ட குழுவினர் வழிமறித்து, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு மிரட்டினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. எனவே, பணியாளர்கள் வேலைக்கு செல்லவே பயப்படுகின்றனர். கூடங்குளத்தில் தங்கியுள்ள மூத்த விஞ்ஞானிகள் குழு, நாடு திரும்ப திட்டமிட்டிருந்தது. தற்போது தமிழக அரசு நிபுணர் குழுவை நியமித்துள்ளதால், அதன் முடிவுக்காக சில நாட்கள் காத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக குழுவினர் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே, ரஷ்ய விஞ்ஞானிகளின் அடுத்தகட்ட செயல்பாடுகள் அமையும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment