Wednesday, February 29, 2012

விரைவில் தீர்வு: கூடன்குளம் பற்றிய அறிக்கை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வல்லுனர் குழு அளித்தது!

Wednesday,February,29,2012
சென்னை::கூடங்குளம் விவகாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆய்வு அறிக்கையை நேற்று அளித்தது. அதைத் தொடர்ந்து பிரச்னையில் விரைவில் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுமின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் திறப்பதை எதிர்த்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் விளக்கத்தை போராட்டக்குழுவினர் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு வல்லுநர் குழுவை அமைத்தது. குழுவில் அணுமின் சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டி.அறிவுஒளி, அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநர் டாக்டர் எஸ்.இனியன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எல்.என்.விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிபுணர் குழு, கூடங்குளம் பகுதிக்கு கடந்த 18ம் தேதி நேரில் சென்று அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடையே தற்போது நிலவும் அச்ச உணர்வு குறித்து ஆய்வு செய்து திரும்பியது. பின்னர் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்து ஒரு வாரம் ஆய்வு அறிக்கையை தயார் செய்தது.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிபுணர் குழு தனது அறிக்கையை வழங்கியது. அப்போது தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உடனிருந்தார். இதுகுறித்து நிபுணர் குழு கூறியதாவது: கூடங்குளம் சென்று அங்குள்ள அணுமின் நிலையத்தை பார்வையிட்டோம். அணுஉலை பாதுகாப்பு மற்றும் கட்டமைப்புகள் குறித்து தெரிந்து கொண்டோம். மேலும் அப்பகுதி மக்களின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.

நாங்கள் பார்த்தது, அப்பகுதி மக்கள் எங்களிடம் கூறியதை அறிக்கையாக தயார் செய்து தமிழக முதல்வரிடம் கொடுத்துள்ளோம். தமிழக அரசுதான் இனி இறுதி முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மாநில அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதைத் தொடர்ந்து, ஓரிரு நாளில் தமிழக அரசு தன் முடிவை வெளிப்படுத்தும். இதனால், இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு நிதி உதவி அளித்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த, ரெய்னர் ஹெர்மன்(50) என்பவரை கியூ பிரிவு போலீசார் பிடித்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். பின் அவர், ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், போராட்டக் குழுவுக்கு 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி அளித்திருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்த அமைப்பு மீது மத்திய அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

* நன்கொடை விவகாரத்தில் 4 நிறுவனம் சிக்கின.
* கைதான ஜெர்மன் நபர் அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
* தமிழக அரசு குழு அறிக்கை மூலம் முடிவுக்கு வருகிறது பிரச்னை.

No comments:

Post a Comment