Friday, February 17, 2012

மும்பை மாநகராட்சி தேர்தலால் மோனோ ரயில் சோதனை தள்ளிவைப்பு!

Friday, February 17, 2012
மும்பை::மும்பையில் இன்று நடைபெறுவதாக இருந்த மோனோ ரயில் சோதனை ஓட்டம், மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு வரும் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மும்பையில் மோனோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. மலேசியாவை சேர்ந்த ஸ்கோமி நிறுவனம், எல் அண்ட் டி நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வடலா டிப்போவிலிருந்து மைசூர் காலனி வரை 4 கிலோ மீட்டர் பாதை முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்று மோனோ ரயில் வெள்ளோட்ட சோதனை நடத்த மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் திட்டமிட்டிருந்தது. இதற்கிடையில் மும்பை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் மோனோ ரயில் சோதனை நடத்துவது வாக்காளர்களை ஆளும் கட்சிக்கு ஆதரவாக திருப்பும் செயல் என பாஜ தலைவர் மாதவ் பண்டாரி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருந்தார். தேர்தல் நன்னடத்தை விதிமீறல் எனவும் தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சோதனை ஓட்டம் வரும் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment