Friday, February 24, 2012

மீனவர்கள் மீது தாக்குதல்: அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!

Friday, February 24, 2012
மதுரை::மீனவர்கள் மீதான தாக்குதல், எங்கு, எப்போது நடந்தது? பாதிக்கப்பட்டவர்கள் விவரம், வழக்கு நிலுவை பற்றி, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது."தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க, போதிய பாதுகாப்பு வழங்கவும், கச்சத்தீவு தொடர்பாக, இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை, மறு பரிசீலனை செய்யவும் உத்தரவிட வேண்டும்' என, மதுரை அருகே எட்டிமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

மீனவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும்' என, மனித உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகி வாஞ்சிநாதன் மனு தாக்கல் செய்தார். "கச்சத்தீவை திரும்பப் பெற சர்வதேச கோர்ட்டில், மத்திய அரசு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

இம்மனுக்கள் நேற்று, நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், ஆர்.கருப்பையா கொண்ட பெஞ்ச் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.பின், நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:கடந்த, 2011 அக்., 14 முதல், மீனவர்கள் மீதான தாக்குதல் எங்கு, எப்போது நடந்தது? பாதிக்கப்பட்டவர்கள் விவரம், வழக்கு நிலுவை பற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மீனவர்கள் எல்லை மீறிச் செல்லாமல் இருக்க, அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, ஏப்., 2க்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment