Thursday, February 23, 2012சென்னை::என்னை ஜெயிக்க வையுங்கள் என்று கூறி வாக்காளர்கள் காலில் விழுந்து தி.மு.க. வேட்பாளர் வாக்கு கேட்பது தமிழக அரசியலில் புதுமையாக உள்ளது.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதிக்கு மார்ச் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு முன்பே அ.தி.மு.க. பொதுச் செயலரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, முத்துச்செல்வி என்ற வேட்பாளரை அறிவித்துவிட்டார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜவஹர் சூரியகுமாரை வேட்பாளராக அறிவித்தார். இவரை தொடர்ந்து ம.தி.மு.க வேட்பாளரான சதன் திருமலைகுமார், தே.மு.தி.க. வேட்பாளராக முத்துக்குமார் அறிவிக்கப்பட்டனர்.
இந்த இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொருவரும் தங்கள் தலைவர்களின் பெயரை சொல்வி வாக்காளர்களிடம் வாக்கு கேட்டாலும் தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார், வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்குகளை கேட்பதுதான் புதுமையாக இருக்கிறது.
சங்கரன்கோவில் நகரின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் தி.மு.க. வேட்பாளர் சூரியகுமார், சங்கரன்கோவில் மாதா கோவில் தெருவில் வீட்டில் நின்று கொண்டிருந்த வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு கேட்டது வாக்காளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
தி.மு.க. வேட்பாளரின் இந்த அதிரடி நடவடிக்கை வாக்காளர்களை மட்டுமின்றி மற்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. என்னதான் காலில் விழுந்து வாக்குகேட்டாலும் நாங்கள் ஜெயிப்பது உறுதி என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இருந்தாலும், வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு கேட்டு தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால்... என்ற பயம் அ.தி.மு.க.வினருக்கு வந்துவிட்டதோ என்னவோ. அம்மா காலில் விழும் எங்களுக்கு இதுவெல்லாம் ஒரு விஷயமே கிடையாது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் இழப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் அரசியல் கட்சி வேட்பாளர்கள்.
No comments:
Post a Comment