Wednesday, February 22, 2012

குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை - ஐ.தே.க!

Wednesday,February 22,2012
இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்கான எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடுகின்றது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இது குறித்து கருத்து தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகின்ற போதிலும், இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட தருஸ்மான் குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் எவ்வித திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

செனல் ஃபோ தொலைக்காட்சியின் ஊடாக கடடவிழ்த்து விடப்பட்ட இலங்கைக்கு எதிரான கருத்துக்களை தோல்வியடைச் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும், அதிலுள்ள சிபாரிசுகளையும் அரசாங்கம் புறந்தள்ளிவிட முயற்சிப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சர்வதேச மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை ஓரளவு எதிர்நோக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை அரசாங்கம் பொருட்படுத்தாது செயற்படுமாயின் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment