Wednesday, February 22, 2012

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயரை முற்றுகையிட்டு கோஷம் திமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்!

Wednesday,February 22,2012
சென்னை::சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மேயர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டதை தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை 10.28 மணிக்கு ரிப்பன் மாளிகையில் தொடங்கியது. கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். கமிஷனர் பி.டபிள்யு.சி. டேவிதார் முன்னிலை வகித்தார். கேள்வி நேரம் தொடங்கியபோது, சுபாஷ் சந்திரபோஸ் (திமுக) குறுக்கிட்டு, ‘நாங்கள் கொடுத்த கேள்வியை ஏன் அனுமதிக்கவில்லை’ என்றார். மேயர்: உங்களுக்கு வாய்ப்பு தரப்படும். விளக்கம் அளிக்கலாம். விதிகளின்படிதான் மன்றக் கூட்டம் நடக்கிறது. 8 நாட்களுக்கு முன்பே கேள்வி கேட்க நோட்டீஸ் தர வேண்டும். சுபாஷ்: 13-ம் தேதியே கடிதம் கொடுத்து அதை பதிவு செய்து இருக்கிறோம். மேயர்: நீங்கள் கொடுக்கும் கேள்வி சபைக்கு ஏற்றதாகவும், பொதுமக்களுக்கும் நிர்வாகத்துக்கும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். கேள்வியை அனுமதிப்பதும் அனுமதிக்காததும் மேயரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. இதை ஏன் அரசியல் ரீதியாக அணுகுகிறீர்கள்? நான் பேசும்போது குறுக்கிடாதீர்கள். அப்படி குறுக்கிட்டால் 170 பேரும் (ஆளும் கட்சியினர்) எழுந்து நின்றால் என்ன ஆகும்?

சுபாஷ்: கொசுத் தொல்லை, குப்பை பிரச்னை குறித்துதான் கேள்வி கேட்டு இருந்தோம். 170 பேர், 23 பேர் என்று பிரித்து பேசாதீர்கள். எல்லா கவுன்சிலர்களும் சகோதர, சகோதரிகளாகத்தான் இருக்கிறோம். (ஆளும் கட்சியில் சலலப்பு). மேயர்: நீங்கள் குறுக்கிட்டு பேசும்போது ஆளும் கட்சியினர் எழுந்து பேசினால் குழப்பம் வருகிறது என்றுதான் சொல்கிறேன். ஆண்ட்ரூஸ் (திமுக): எங்களுக்கு மன்ற கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் 19-ம் தேதிதான் வந்தது. இது சட்டப்படிதான் நடக்கிறதா?. மேயர்: இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் சந்தானம் பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதியை பற்றி ஒரு வார்த்தை குறிப்பிட்டார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுபாஷ் சந்திரபோஸ் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தபோது அருகில் இருந்த அதிமுக கவுன்சிலர் ஆவின் அருண், அவரது கைகளை பிடித்து இருக்கையில் உட்கார வைத்தார். அதிமுகவினரை அமைதியாக இருக்கும்படி கூறிய மேயர், கருணாநிதி பற்றி சந்தானம் பேசிய வார்த்தைகளையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.

பின்னர் தொடர்ந்து மேயர் சைதை துரைசாமி பேசும்போது, ‘‘கடந்த காலத்தில் வரி விதிக்கப்படும் முறைகளில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. ஒரு மளிகை கடைக்கு என்ன வரி விதிக்கப்படுகிறதோ அதே அளவு வரிதான் ஐ.டி. பார்க்குக்கும் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியை முன்னாள் மேயர்கள் எப்படி நடத்தினர் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். மாசு ஏற்படுத்திய மோசமான நிர்வாகத்தை மக்கள் அகற்றி உள்ளனர்’’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், மேயரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி தலைவர் சுபாஷ் சந்திரபோஸை பெண் கவுன்சிலர் ஒருவர் தாக்கினார். திமுக உறுப்பினர்கள் மீது காகிதம் வீசப்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற மேயர் உத்தரவிட்டார். அதன்படி திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மன்ற கூடத்துக்கு வெளியே நின்று கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment