Friday, February 17, 2012

உதயகுமாரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்கைது செய்ய உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் மனு!

Friday, February 17, 2012
மதுரை::கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, வன்முறையைத் தூண்டும் வகையில் போராடி வரும் உதயகுமாரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடக் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை புதூரைச் சேர்ந்த சிவகுமார் தாக்கல் செய்த மனு:கூடங்குளம் அணுமின் நிலையம், 2011 டிசம்பரில் உற்பத்தியை துவக்குவதாக இருந்தது. இதன் மூலம், 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி கிடைக்கும். தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இடிந்தகரை மக்களை, அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடும்படி, சிலர் தவறாக வழிநடத்துகின்றனர்.

உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் மற்றும் சிலர், படிக்காத அப்பாவி மக்களை போராடத் தூண்டுகின்றனர்.ஒவ்வொரு நாள் போராட்டத்திற்கும், உதயகுமார் பல லட்ச ரூபாய் செலவு செய்வதாக தெரிகிறது. அவர், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறார். கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள், அதிகாரிகளை மிரட்டுகிறார். அணுமின் நிலையத்தில் உள்ள யுரேனியத்தை வெளியில் எடுக்காவிடில், தானே அதை எடுக்கப் போவதாகக் கூறுகிறார். போலீஸ் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுகிறார். ராதாபுரம் கடற்கரை பகுதியில், 5,000 பேர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

வன்முறையைத் தூண்டும் அவரது பேச்சால், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்காவிடில், முடிசூடா மன்னனாக திகழ்வார். அவரது பேச்சால் விஞ்ஞானிகள் அச்சமடைந்துள்ளனர். இதை துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். அணு மின் நிலையம் துவக்கப்படாவிடில், 14 ஆயிரம் கோடி ரூபாய் வீணாகிவிடும். உதயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். அவர், இப்பகுதியில் உலவுவது மர்மமாக உள்ளது. உதயகுமாரை அப்புறப்படுத்தி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மனுதாரர் வழக்கறிஞர் பட்டுராஜன், மனு தாக்கல் செய்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment