Friday, February 17, 2012

தமிழர் வாழ்வுரிமை சட்டத்திருத்தம் வராவிட்டால் இந்தியா - இலங்கை உறவில் சிக்கல் ஏற்படும்-வெளியுறவு அமைச்சக முன்னாள் செயலர் லகான் லால் மெகாட்ரா!

Friday, February 17, 2012
புதுச்சேரி::இலங்கையில், தமிழர்களின் வாழ்விற்கு சம உரிமையளிக்கும், 13வது சட்டத் திருத்தம் கொண்டு வரவில்லையெனில், அது, இந்தியா-இலங்கை உறவில் சிக்கலை ஏற்படுத்தும்' என, வெளியுறவு அமைச்சக முன்னாள் செயலர் லகான் லால் மெகாட்ரா பேசினார்.

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நேற்று துவங்கிய, சர்வதேச கருத்தரங்கில் அவர் பேசியதாவது: இலங்கை- புலிகள் உச்சக்கட்ட போரின் போது, தமிழர்கள் கொத்தாக மரணமடைந்தனர். அப்போது, தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தியாவால் இலங்கைக்கு போர்தளவாட பொருட்கள் கொடுக்க முடியவில்லை.

இரு நாடுகளுக்கு இடையே அப்போது ஏற்பட்ட இடைவெளியை, சீனா நன்கு பயன்படுத்தி கொண்டது. போருக்கு தேவையான ஆயுதங்களை தயக்கமின்றி வழங்கி, இலங்கையின் முக்கிய கூட்டாளியாக சீனா மாறிவிட்டது. இதனால் தான், இலங்கையின் முக்கிய உட்கட்டமைப்பில் சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், இலங்கை-இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுவாக இருந்தாலும், சீனா இலங்கையில் தீவிரமாக ஊடுருவியுள்ளது என்பதே உண்மை.

சீனாவுடன் இந்தியா போட்டி போட்டுக் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான், இலங்கையில் இந்திய ஆதிக்கம் தொடரும்.புலிகளுடனான போருக்கு பின், தமிழர்களுக்கு சம உரிமையளிக்கும், 13வது சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என, இலங்கை உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது திடீரென பின் வாங்குகிறது. இதனால், அதிகாரப் பகிர்விற்கான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. இலங்கையில், 13வது சட்டத் திருத்தம் கொண்டு வரவில்லையெனில், அது இந்தியா-இலங்கை இடையேயான உறவில் சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு லகான் லால் மெகாட்ரா பேசினார்.

No comments:

Post a Comment