Sunday, February 26, 2012

இத்தாலிய கப்பலில் சோதனை நடந்தது: துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்!

Sunday, February 26, 2012
கொச்சி::தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பலில், கேரள போலீசார் நேற்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். சோதனையில், மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர்.

கேரளா கொல்லம் அருகே 15ம் தேதி மாலை 4.30 மணிக்கு அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது அவ்வழியே சென்ற "என்ரிகால லக்சி' என்ற இத்தாலிய எண்ணெய் கப்பலின் கடற்படை வீரர்கள் சுட்டதில், படகில் இருந்த இரு தமிழக மீனவர்கள் பலியாகினர். இதை அடுத்து கோர்ட் உத்தரவுபடி, அக்கப்பல் கொச்சி துறைமுகத்தின் எண்ணெய் கப்பல் தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. கப்பலில் சோதனையிட கொல்லம் கோர்ட் கேரள போலீசுக்கு அனுமதி வழங்கியது. மேலும், போலீசார் சோதனையிடும்போது, இத்தாலி கப்பல் சார்பாக பிரதிநிதிகளும் உடன் இருக்கவும் கோர்ட் அனுமதித்தது. தொடர்ந்து, இத்தாலியில் இருந்து ஆயுத வல்லுனர்கள் மேஜர் பிளீபஸ் லுகா, மேஜர் பிராட்டினி பவ்லோ ஆகியோர் நேற்று காலை கொச்சி வந்தனர். கேரள போலீசில் கொச்சி நகர போலீஸ் கமிஷனர் அஜீத் குமார், கொல்லம் எஸ்.பி., தேபேஷ்குமார் பீகிரா, தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் கேரள சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீசார் என, 19 பேரும், இத்தாலி சார்பில் ஆயுத வல்லுனர்கள் உட்பட பத்துபேர் என, மொத்தம் 29 பேர் கப்பலில் சோதனை நடத்தச் சென்றனர்.

நேற்று காலை 11 மணிக்கு என்ரிகா லக்சி கப்பலில் சோதனை துவங்கியது. சோதனையின்போது, மீனவர்களை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கைப்பற்றுவதே கேரள போலீசாரின் முக்கிய நோக்கமாக இருந்தது. இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த சோதனைக்கு பின், போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "இத்தாலிய கப்பலில் நடத்திய ஆயுத சோதனையில் நிறைய ஆயுதங்களையும், மீனவர்களை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் கைப்பற்றி உள்ளோம்' என்றனர். இந்நிலையில், இத்தாலிய கப்பலை நாளை மாலை 5 மணி வரை கொச்சி துறைமுகத்தை விட்டு வெளியேற கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. பலியான மீனவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நஷ்ட ஈடுக்கான மனுக்கள் நாளை ஐகோர்ட் பரிசீலிக்க உள்ளது.

No comments:

Post a Comment