Sunday, February 26, 2012

மக்களை கொலை செய்தவர்கள் ஜனாதிபதியை மனித உரிமை மீறல் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர் – காத்தான்குடியில் கல்வியமைச்சர்!

Sunday, February 26, 2012
இலங்கை::மக்களை கொலை செய்து மனித உரிமை மீறல் செய்தவர்கள் இன்று ஜனாதிபதியை மனித உரிமை மீறல் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர் என கல்வியமைச்சர் பந்துள குணவர்த்தன தெரிவித்தார்.
காத்தான்குடியில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஸாவிய்யா மகளிர் வித்தியாலய கட்டிடத்தை (24.2.2012)மாலை திறந்து வைத்து உரையாற்றும் போதே கல்வியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய கல்வியமைச்சர் இந்த நாட்டில் மனித உயிர்களை இரக்கமின்றி கொலை செய்த விடுதலைப்புலிகளும் அவர்களுக்கு சார்பானவர்களும் இன்று ஜனாதிபதியை மனித உரிமை மீறல் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர்.

காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாயல்களிலும் புலிகள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்களையும் கொலை செய்தார்கள்.

இந்த நிலையில் ஜனாதிபதியை மனித உரிமை மீறல் செய்ததாக குற்றம் சுமத்தி ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சூழ்ச்சி செய்கின்றனர்.

இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களின் உரிமைகளும் இந்த அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளன. அனைவரும் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர். அனைத்து மக்களின் உரிமைகளும் ஜனாதிபதியினாலும் அராசங்கத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நாடு அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானதாகும். கஸ்ட்டத்திலும் அமைதியற்ற நிலையிலும் இருந்த நாம் இன்று நிம்மதியாக இருக்கின்றோம்.

முன்னாள் கல்வியமைச்சர் பதியுதீன் மஹ்மூத் இந்த நாட்டின் முஸ்லிம்களின் கல்விக்காக பல சேவைகளை செய்தவர் கம்பளை சாஹிறா கல்லூரி உட்பட பல பாடசாலைகளை இவர் உருவாக்கினார்.

இவர் காத்தான்குடிக்கு வருகை தந்ததன் பின்னர் காத்தான்குடிக்கு வருகை தந்த கல்வி அமைச்சர் நான் தான்.

இதே போன்று மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் எனது நீண்டகால நண்பர்.

இன்று இந்த நாட்டில் முஸ்லிம் பெண்கள் கல்வித்துறையில் பாரிய முன்னேற்றத்தை கண்டு வருகின்றனர். வைத்தியத்துறை போன்ற பல் வேறு துறைகளிலும் முஸ்லிம் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

கொழும்பு, கண்டி, குருநாகல் போன்ற நகரங்களிலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி போன்று இன்று கிராமப்பாடசாலைகளும் முன்னேற்றம் கண்டு வருகின்றன.

இந்த ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் காத்தான்குடியில் நான்கு பாடசாலைகள் இந்த ஆண்டில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் பல பாடசாலைகள் இன்று அபிவிருத்தி அடைந்து வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை அதிகாரி அஸதுர் றஹ்மான் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட, சம்மேளன தலைவர் எம்.சுபைர், சட்டத்தரணி ஏ.எல்.ஏ.ஜவாத் வலய கல்விப்பணிப்பாளர் செயினுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment