Wednesday, February 22, 2012

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday,February 22,2012
இலங்கை::சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றிரவு ஜெனீவாவிற்கு பயணமாகியுள்ளார்.

பல்வேறு நாடுகளின் அரச பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் இந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஒருவராக கலந்து கொள்கிறார்.

அதே வேளையில், தமிழ் பேசும் மக்களால் அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு எமது மக்கள் அடைய வேண்டிய அரசியலுரிமை சுதந்திரம் குறித்து பன்னாட்டு அரச பிரதிநிதிகளோடும் கலந்துரையாடவுள்ளார். என ஈபிடிபி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது இனங்களுக்கிடையில் அல்லது அரசாங்கத்திற்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை தூண்டி விடுவது அல்ல என்றும், மாறாக தமிழ்பேசும் மக்கள் அடைய வேண்டிய அரசியலுரிமைகளை அடைவதே பிரதான இலக்கு என்றும் கருதி செயற்படும் அமைச்சர், இவைகள் குறித்து நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளை பன்னாட்டு அரச பிரதிநிதிகளோடும் கருத்துக்களை பரிமாறவுள்ளார் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கைத்தீவில் நிலவும் அமைதி, சமதானம், மற்றும் வன்முறைகளற்ற சூழலை மேலும் வலுப்படுத்தி அவற்றை பாதுகாப்பதற்காகவும், இனங்களுக்கிடையில் சமத்துவ உறவு, அரசியல் சமவுரிமை என்பவற்றை உருவாக்குவதற்காகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தனது கருத்துக்களையும் அதற்கான நடைமுறை சார்ந்த செயற்திட்டங்களையும் முன்வைக்கவுள்ளார் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment