Friday, February 24, 2012

உதயகுமார் கும்பல் மீண்டும் வெறிச் செயல்: மத்திய அரசு அதிகாரிகள் சிறைவைப்பு!

Friday, February 24, 2012
திருநெல்வேலி::கடலோர ஆய்வுக்கு வந்த மத்திய அரசு நிறுவன ஊழியர்களை, 3 மணி நேரம் அறையில் சிறைப்படுத்தி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, உதயகுமார் உள்ளிட்டவர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும், கடற்கரையோரங்களில் சுனாமி, கடல் சீற்ற பாதிப்புகள் ஏற்படும் பகுதிகள், கடற்கரையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் வரையிலான நிலப்பகுதியின் மாற்றங்கள் குறித்து, வரைபடம் தயாரிக்கும் பணியில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மைத் திட்டம் செயல்படுகிறது. உலக வங்கியின் நிதியுதவியில் நடக்கும் இந்த திட்டத்தை, திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள கடற்கரையோர கிராமங்களில், ஐ.ஐ.சி., டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ரசூல் தலைமையில், 5 பேர், நேற்று ஒரு ஜீப்பில், நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களில் ஆய்வில் ஈடுபட்டனர். கூடங்குளத்தை அடுத்துள்ள கூத்தங்குழி கிராமத்தில் ஆய்வில் ஈடுபட்டபோது, அங்கு திரண்டு வந்த ஒரு தரப்பினர், இவர்களை பிடித்தனர். அவர்களது வாகனத்துடன் சேர்த்து, அங்குள்ள கிறிஸ்துவ ஆலய பாதிரியாரின் அலுவலகத்தில், சிறை பிடித்து உட்கார வைத்தனர். அவர்கள் தங்களது பணி, அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்தும், விடவில்லை. பாதிரியாரின் தகவலின் பேரில், உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜேசுராஜ் உள்ளிட்ட கூடங்குளம் கும்பல், அங்கு வந்தனர். அதிகாரி ரசூல், மற்றும் சித்தேத்திர சிங், குந்தன்குமார், சுனில்குமார் பாண்டே, அஞ்சிரெட்டி ஆகியோரிடம், "ஏன் எங்கள் பகுதிக்கு வந்தீர்கள்?' எனக் கேட்டு, தகராறில் ஈடுபட்டதோடு, தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதில், ரசூல் பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்ததும், ராதாபுரம் தாசில்தார் தலைமையில், அதிகாரிகள், போலீஸ் படையினர் கூத்தங்குழி சென்றனர். அவர்கள், மத்திய அரசின் கடலோர ஆய்வு பணிக்கு வந்திருப்பதை தெளிவுபடுத்தினர். காலை 9.30 மணிக்கு சிறை பிடிக்கப்பட்டவர்கள், பகல் 12.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். அதிகாரிகள் பல மாதங்களாக கடற்கரை கிராமங்களில் ஆய்வு செய்து, கம்ப்யூட்டரில் வைத்திருந்த அனைத்து தகவல்களையும், உதயகுமார் தரப்பினர், ஒரு நகல் எடுத்துக் கொண்டனர். காயமுற்ற ரசூல், கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்பால், வழக்கு பதிவு செய்தார். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உதயகுமார் உட்பட, அடையாளம் தெரிந்த, 21 பேர், தெரியாத 29 பேர் என, 50 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுவரை, 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஊழியர்களை தாக்கிய சம்பவத்திலும், ஜாமினில் வெளிவரமுடியாதபடி, 506 (2) உட்பட பல்வேறு பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment