Tuesday, February 28, 2012

சமாதான காலத்தில் துணை ஆயுதக் குழுக்களே பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்!

Tuesday, February 28, 2012
இலங்கை::சமாதான காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இராணுவத்தினருக்கோ, புலிகளுக்கோ எதுவித தொடர்பும் இல்லை. மாறாக துணை ஆயுதக் குழுக்களே பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக இத்தகைய கடத்தல்களில் ஈடுபட்டன ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மீளிணக்கக் கருத்துக்கான குழுவின் ஆலோசகருமான பேராசிரியர் ரஜீவவிஜயசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுக் காலை அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்ற மீளிணக்கத்துக்கான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமய, சமூக, பொருளாதார, கல்வியாளர்கள் மற்றும் பிரதேச செயலர்கள், காவற்துறையினர் கலந்து கொண்டனர்.

யாழ். மாவட்டத்தின் கல்விச் செயற்பாடுகளில் முன்னேற்றம் தேவை மற்றும் இளம் சமுதாயம் தவறான வழிகளால் அழிந்து போகின்றது. பாடசாலை மாணவிகள் இளம் வயதிலேயே கர்ப்பம் தரிக்கின்றனர். தமிழர்களுக்குரிய பண்பாடு, கலாசாரம் என்பன அழிந்து செல்கின்றன என்று சமூகச் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் யாழ். மாவட்டத்டதில் தமிழ் மக்களின் பாரம்பரியங்களைப் பேணிக்காக்கின்ற வகையில் அருங்காட்சியகம் எதுவுமில்லை. எனவே தமிழர்களின் வாழ்வியலைப் பேணிக்காக்கின்ற வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.

ஏ9 பிரதான வீதியூடாக பயணம் செய்கின்றபோது ஓமந்தையில் நள்ளிரவு 12 மணிக்கு பேருந்தினால் இறக்கி மக்கள் பொதிகளுடன் நீண்ட தூரம் நடக்கவிடப்படுகின்றனர். இத்தகைய சிரமங்கள் நீக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. கலந்துரையாடலில் பங்கு பற்றிய காவற்துறையினரிடம் இது தொடர்பில் ஆராயுமாறு பேராசிரியர் ரஜீவவிஜயசிங்க பணித்தார்.

யாழ்.கொழும்பு தனியார் பேருந்து வழி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு ஒரு லட்சம் ரூபா வரையில் அறவிடப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையின் எந்தப் பாகத்துக்குமான வழி அனுமதிப்பத்திரம் இவ்வாறான பெருந்தொகைப் பணம் அறவிடப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகளுடன் மாணவர்கள் வீதிகளில் நின்று சேஷ்டை விடுகின்றனர். இதனைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் போது கூறப்பட்டது.

இறுதியாக யாழ். குடாநாட்டின் பெரும்பாலான பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இதுவரையில் விடுவிக்கப்படாமல் உள்ளன. அத்துடன் பொதுமக்களின் வீடுகளில் இராணுவத்தினர் தங்கியிருப்பதால் மக்கள் அகதி முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.

மேலும் இராணுவத்தினர் சிவில் நடவடிக்கைகளிலும் தலையிடுகின்றனர். இவ்வாறு சமூக மட்டப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு, சரியான தரவுகள் இன்றி இப்படிக் கூறவேண்டாம். எந்த இடங்களில் பிரச்சினை உள்ளது குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்று பேராசிரியர் வினவினார்.

யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவுற்ற போதும் இதுவரையில் நிரந்தரத் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் எதுவும் தெரியாது என்று சமூகமட்டப் பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர்.சமாதான காலத்தில் காணாமற்போனவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. அதேபோன்று இவர்கள் விடுதலைப் புலிகளாலும் கடத்தப்படவில்லை. மாறாக துணை ஆயுதக் குழுக்களாலேயே பழிவாங்கல்களுக்காகக் கடத்தப்பட்டனர்.

இதனைவிட இறுதி யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வைத்தியசாலைகள் மீது இராணுவத்தினர் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment