Friday, February 24, 2012

தமிழக, இலங்கை மீனவர்கள் மார்ச் 4ம் தேதி கச்சத்தீவில் சந்திப்பு!

Friday, February 24, 2012
வதோரா(குஜராத்)::இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்தாலும் கூட தமிழக மீனவர்கள் மீது ஒருபோதும் இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதே இல்லை என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவசம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் வதோரா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவின் தென்கடற்பரப்பில் மீனவர்களை இத்தாலிய சரக்குக் கப்பலில் இருந்த இருவர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். கடற்கொள்ளையர்கள் என நினைத்து இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கைக் கடற்பரப்புக்குள்ளேகூட இந்திய மீனவர்கள் வந்தாலும் எமது நாட்டு கடற்படை ஒருபோதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதே இல்லை. சர்வதேச எல்லையைத் தாண்டி வரும் மீனவர்களை நாங்கள் தடுத்து பின்னர் விடுவித்தே இருக்கிறோம்.

குஜராத் மாநிலத்துக்கு இப்போதுதான் முதல் முறையாக வந்திருக்கிறேன். மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய மாநிலமாக இருக்கிறது. குஜராத் முதல்வர் மோடியை சந்திக்கவும் விருப்பமாக இருக்கிறேன்.

குஜராத் மாநிலமும் இலங்கை நாடும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. இலங்கையில் இன்னும் கூடுதலாக விகிதத்தில் இந்தியர்கள் முதலீடு செய்ய வேண்டும்.

இந்தியாவின் தேசிய மின் கழகமும் இலங்கை மின்சார வாரியமும் இணைந்து 500 மெகாவாட் மின்நிலையத்தை அமைக்க உள்ளன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இலங்கை ஆதரவு தருகிறது.

அண்மையில் மாலத்தீவு நாட்டு பிரச்சனையில் நேரடியாக தலையிடாமல் இந்தியா தீர்வு கண்ட அணுகுமுறை பாராட்டுக்குரியது என்றார் அவர்.

கச்சத்தீவில் சந்திக்கும் தமிழக, இலங்கை மீனவர்கள்:

இதற்கிடையே தமிழகம் மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவில் மார்ச் 4ம் தேதி சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

அங்குள்ள அந்தோனியார் தேவாலய விழாவையொட்டி நடக்கும் இந்தக் கூட்டத்தில், இந்திய, இலங்கைக் கடற்பகுதியில் மீன்பிடிப்பதில் எழும் சர்ச்சைகள் தொடர்பாக அவர்கள் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டதுக்கு தங்களது பிரதிநிதிகளை அனுப்ப தமிழகம் மற்றும் வடக்கு இலங்கையில் உள்ள மீனவர் சங்கங்கள் ஒப்புக் கொண்டிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment