Wednesday, February 22, 2012

இலங்கை - இந்திய மீனவர்கள் மார்ச் 4ம் திகதி கச்சத்தீவில் சந்திக்க ஏற்பாடு!

Wednesday,February 22,2012
இலங்கை::இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளுக்கும் இடையில் சுமூகமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ஈபிடிபி இன்று (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் மத்தியில் நிலவி வரும் கடல் எல்லை பிரச்சினைகள் குறித்து நிரந்தர தீர்வு காணும் பொருட்டு தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரு தரப்பு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளும் கச்சதீவில் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்.

இதன் பிரகாரம் கச்சதீவு பெருநாள் நிகழவிருக்கும் தினங்களில் ஒன்றான எதிர்வரும் மார்ச் 4ம் திகதி இரு தரப்பு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளும் இணக்கப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வருமாறு அமைச்சர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

இதை ஏற்றுக்கொண்டுள்ள இரு தரப்பு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளும் கச்சதீவில் நேரில் சந்தித்து இணக்கமாகவும் சுமுகமாகவும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இச்சந்திப்பிற்கான ஏற்பாடு குறித்து இரு தரப்பு கடற்றொழிலாளர்களும் தமது மகிழ்ச்சியை தெரிவித்திருப்பதோடு அமைச்சரின் இந்த நல்லெண்ண முயற்சியினை பாராட்டியும் உள்ளனர்.

குறிப்பாக தொழில் ரீதியாக தமது கடல் வளங்களை உரிய முறையில் அனுபவிக்க முடியாமல் பல்வேறு இடர்களையும் சுமந்து நிற்கும் வட பகுதி கடற்றொழிலாளர்கள் இச்சந்திப்பின் மூலம் தமது வாழ்வாதார உரிமைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஈபிடிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment