Tuesday, February 14, 2012புதுடெல்லி::பிரதமர் வீட்டு அருகே சென்று கொண்டிருந்த இஸ்ரேல் தூதரகத்தை சேர்ந்த கார் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதரகங்களை தாக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக இஸ்ரேல் வெளியுறவு செய்தி தொடர்பாளர், ஜெருசலேத்தில் நேற்று முன்தினம் கூறினார். அவர் கூறியதை போலவே, ஜார்ஜியா தலைநகர் பிலிசியில் இஸ்ரேல் தூதரகத்தை தகர்க்கும் நோக்கில் நிறுத்தப்பட்டிருந்த குண்டுகள் நிறைந்த காரை போலீசார் சரியான நேரத்தில் கண்டுபிடித்து, அதை செயல் இழக்க செய்தனர். இந்த நிலையில்தான் டெல்லியில் இஸ்ரேலிய தூதரக கார் வெடித்து சிதறியுள்ளது.
இஸ்ரேலிய தூதரகத்தை சேர்ந்த கார், தூதரகத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. காரில் தூதரக ஊழியரின் மனைவி இருந்தார். மிகவும் பாதுகாப்புமிக்க பிரதமர் மன்மோகன் சிங் வீட்டுக்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள அவுரங்கசீப் சாலையில் கார் வேகமாக சென்றது. அங்கிருந்த சி.என்.ஜி. எரிவாயு நிலையத்தில் காரை நிறுத்தி எரிவாயு நிரப்பிக் கொண்டனர். பின்னர், தூதரகத்தை நோக்கி கார் சென்றது. வழியில் ஒரு சிக்னலில் நின்ற கார், பச்சை விளக்கு எரிந்தவுடன் புறப்பட்டது. அடுத்த சில விநாடிகளில் பயங்கர சத்தத்துடன் கார் வெடித்தது. தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரில் இருந்தவர்கள் அலறியடித்தப்படி வெளியே இறங்கினர். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்தபோது, அருகில் இருந்த 4 கார்களும் சேதமடைந்தன. அதில் இருந்த 2 பேர் காயமடைந்தனர்.
பிரதமர் வீடு அருகே நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். காரில் எரிந்த தீயை அணைத்தனர். அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விசாரணையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு கார் வெடித்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில் சி.என்.ஜி எரிவாயு சிலிண்டர் வெடித்தும் விபத்து ஏற்பட்டிருக் கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவுரங்கசீப் சாலையில் சென்று கொண்டிருந்த இஸ்ரேலிய தூதரக காரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். சிக்னலில் கார் நின்ற போது, மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய வாலிபர்கள், காரின் பின் பகுதியில் ஏதோ ஒரு பொருளை வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் பறந்து விட்டதாக சிலர் தெரிவித்தனர். அது வெடிகுண்டாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரத்தில் முன்னால் சென்ற கார் மீது தூதரக கார் மோதியதில் வெடித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த சம்பவத்தில் தூதரக காருடன் சேர்ந்து 4 கார்கள் சேதமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரவிர்சிங் கூறுகையில், ‘‘காதை பிளக்கும் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றேன். அங்கு ஒரு கார் எரிந்து கொண்டிருந்தது. சில நிமிடங்களில் தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்’’ என்றார்.
காயம் அடைந்த 4 பேரும் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய தூதரக செய்தி தொடர்பாளர் டேவிட் கோல்டுபார்ப் கூறுகையில், ‘‘இதுபற்றி போலீசாருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சரியான விவரம் இல்லாமல் இந்த சம்பவம் பற்றி எதுவும் கூற முடியாது’’ என்றார். ரிமோட் கன்ட்ரோல் மூலம் கார் குண்டு வெடிக் கப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் குப்தா தெரிவித்தார்.
No comments:
Post a Comment