Monday, February 27, 2012

முல்லைப் பெரியாறு: ஆனந்த் குழுவுக்கு மேலும் 2 மாத அவகாசம்-தமிழகம், கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Monday, February 27, 2012
டெல்லி::முல்லைப் பெரியாறு அணை ஆய்வு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆனந்த் குழுவின் பதவிக் காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், ஆனந்த் குழுவுக்கு சரியாக ஒத்துழைப்பு தராததற்காக கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனமும் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இக்குழுவினர் பெரியாறு அணையின் பலம் குறித்து பல்வேறு துணைக் குழுக்களின் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வுப் பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. அதே நேரத்தில் ஆனந்த் குழுவின் பதவிக்காலம் பிப்ரவரி 29-ல் முடிவடைய இருந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 2 மாதம் கால அவகாசத்தை உச்சநீதிமன்றத்தில் ஆனந்த் குழு கோரியிருந்தது.

இது தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில் ஆனந்த் குழுவின் கோரிக்கையை ஏற்று அதன் பதவிக் காலத்தை மேலும் 2 மாத காலத்துக்கு உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கண்டனம்

மேலும் தமது ஆய்வு தொடர்பான இடைக்கால அறிக்கையையும் ஆனந்த் குழு தாக்கல் செய்தது. அதில் இந்த விசாரணையின் போது தமிழ்நாடு, கேரள அரசுகள் தங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று ஆனந்த் குழு புகார் கூறியுள்ளது.

இதை சுட்டிக்காட்டி இரு மாநிலங்களுக்கும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடும் கேரள அரசும் ஆனந்த் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

2010 ஆம் ஆண்டு தமிழக, கேரள பிரதிநிதிகளை உள்ளடக்கி நீதிபதி ஆனந்த் குழு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment