Monday, February 27, 2012

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!

Monday, February 27, 2012
ஜெனீவா::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடர் மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிரேரணையொன்று இம்முறை கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையால் அது தொடர்பாக பலரது கவனமும் திரும்பியுள்ளது.

இதேவேளை இலங்கை நேரப்படி இன்றிரவு ஏழு மணியளவில் அரசாங்கம் சார்பில் உரையாற்ற எண்ணியுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் பிரகடனம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மீள்குடியேற்றம் சிறுவர் போராளிகளை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்து கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல்,புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தும் நடவடிக்கை போன்ற விடயங்கள் குறித்து இலங்கை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடபகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டுப் பணிகள் பற்றிய விபரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்பதை நிரூபிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள பரிந்துரைகள், எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவுள்ள பரிந்துரைகள் மற்றும் அதற்கான செயற்பாட்டுத் திட்டம் ஆகியன தொடர்பாகவும் தமது உரையில் சுட்டிக்காட்டவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிக்கப்படுகின்றமை நீதியானதா என கேள்வி எழுப்ப எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்படுவது அநீதியானது என்பதை மத்தியஸ்தமாக சிந்திக்கும் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் அந்த நாடுகள் பிரேரணையை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment