Tuesday, February 14, 2012வேலூர்::தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ.20,100 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் டாஸ்மாக் மூலம் மது விற்பனையை அரசு தொடங்கியது. தற்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. மது விற்பனை ஆண்டுதோறும் சுமார் 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்து வருகிறது. மது விற்பனையில் சரிவு ஏற்படாமல் தடுக்க, காவல் துறையினர் தீவிர சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனை தடுக்கப்படுவதால் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஐஎம்எல்எல் எனப்படும் மதுபானம் 5 கோடியே 23 லட்சத்து 41,000 பாக்ஸ்கள் (47 கோடியே 10 லட்சத்து 69,000 லிட்டர்) விற்பனையாகி உள்ளது. மேலும், 2 கோடியே 72 லட்சத்து 64,000 பாக்ஸ்கள் (21 கோடியே 26 லட்சத்து 59,000 லிட்டர்) பீர் விற்பனையாகி உள்ளது. மதுபானம், பீர் வகைகள் சேர்த்து 68 கோடியே 37 லட்சத்து 28,000 லிட்டர் அளவுக்கு விற்பனையாகி உள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.20,100 கோடி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மது குடிப்பது பேஷன்: குடிப்பழக்கம் தற்போது இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. முன்பு சாராய கடைகள் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும். ஆனால், இப்போது குடியிருப்பு பகுதியிலேயே வந்துவிட்டது. யாருக்கும் தெரியாமல் மது குடித்த காலம் மாறி, இப்போது மது குடிப்பது பேஷனாகிவிட்டது. குழந்தை பிறப்பு, காது குத்து, மஞ்சள் நீராட்டு, திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என பல்வேறு சுப நிகழ்ச்சிகள் முதல் சாவு வீடுகள் வரை எல்லாவற்றிலும் மது முக்கிய இடத்தை பிடித்துள்ளதால் விற்பனை அதிகரித்து வருகிறது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பல்வேறு பண்டிகை நாட்களிலும் மது விற்பனை அமோகமாக நடக்கிறது.
No comments:
Post a Comment