Wednesday,February 22,2012புதுடில்லி::கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருந்து, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 39 வயது நபரை, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். ராணுவம் தொடர்பான தகவல்களை அவர் சேகரித்து, பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டில்லி போலீஸ் குற்றப்பிரிவு துணை கமிஷனர் அசோக் சந்த் கூறியதாவது: போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, கடந்த 13ம் தேதி, டில்லி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தோம். அவர் கோல்கட்டாவைச் சேர்ந்த காம்ரன் அக்பர், 39. அவர் 20 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார் என்பது தெரிந்தது. அவர் டில்லியில் இந்திய ராணுவம் தொடர்பான, சில ரகசிய ஆவணங்களை பெறுவதற்காக வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் டில்லியில் ஆவணங்களை பெற்றுக்கொண்டு, கோல்கட்டா செல்ல ரயிலில் ஏற முயன்றபோது தான் போலீசாரிடம் சிக்கினார். அவர் தான் பெற்ற ஆவணங்களை, பாகிஸ்தான் ராணுவ நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றும் சிலருக்கு அனுப்ப இருந்ததும் தெரியவந்தது. காம்ரன் அக்பர், பாகிஸ்தானில் கராச்சி பகுதியைச் சேர்ந்தவர். அங்கு 1990ம் ஆண்டு கல்வியை முடித்துக் கொண்டு, சில சிறிய வேலைகளை செய்து வந்தார். பின்னர், அட்டாரி எல்லை வழியாக, கோல்கட்டா வந்து, அங்கு தன் மாமா முகமது சலீம் வீட்டில் தங்கினார். அப்போது, ஆசிப் உசேன் என்ற பெயரில், இந்திய பாஸ்போர்ட் பெற்றார். அதன் மூலம் பாகிஸ்தான் விசா பெற்று, 1997ம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் சென்றார். அவர் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளதை அறிந்த, பாகிஸ்தான் ராணுவ நுண்ணறிவுப் பிரிவினர், அவரை தங்களது செயல்களுக்கு பயன்படுத்திக்கொள்ள தேர்வு செய்தனர். அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர், நேபாளம் வழியாக கோல்கட்டாவுக்கு அனுப்பப்பட்டார். பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் தன் பணிக்கு, ஹவாலா மூலம் பணத்தைப் பெற்று வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு துணை கமிஷனர் அசோக் சந்த் தெரிவித்தார்.
No comments:
Post a Comment