Thursday, February 23, 2012சென்னை::சென்னையில் 2 வங்கிகளில் ரூ.39 லட்சத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்ற 5 கொள்ளையர்கள் நள்ளிரவில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொள்ளையர்கள் வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக வேளச்சேரியை சேர்ந்த ஒரு பெண் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் சில மாதங்களாக கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வந்தன. கடந்த மாதம் 23-ம் தேதி பகல் 1.30 மணிக்கு பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக்குள் 5 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. 2 பேர் துப்பாக்கி முனையில் மேனேஜர், கேஷியரை மிரட்டி ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்தனர். மற்றவர்கள் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். கொள்ளையர்கள் இந்தி மற்றும் தமிழ் கலந்து பேசியது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வடமாநிலத்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து வேறு வங்கிகளிலும் அவர்கள் கொள்ளை அடிக்க முயற்சிக்கலாம் என்று போலீசார் கருதினர். இதனால் ரகசிய கேமரா, காவலாளி இல்லாத வங்கிகளை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். போலீசாரின் கண்காணிப்பில் சிக்காமல் திரிந்த கொள்ளையர்கள், கீழ்கட்டளை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கடந்த 20-ம் தேதி மீண்டும் கைவரிசை காட்டினர். பகல் 1.30 மணிக்கு வங்கிக்குள் புகுந்த 5 கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.14 லட்சத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பினர். ஒரு மணி நேரத்துக்கு மேல் வங்கியில் இருந்து பொதுமக்கள், ஊழியர்களை மிரட்டி கொள்ளை அடித்துள்ளனர்.
சென்னையில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 2 வங்கிகளில் துப்பாக்கி முனையில் ரூ.39 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களை சுட்டு பிடிக்கவும் தனிப்படைக்கு உத்தரவிடப்பட்டது. எந்தெந்த வங்கிகளில் கேமரா இல்லை என்பதை அறிந்து அதன்பிறகே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதற்காக பல வங்கிகளில் அவர்கள் நோட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், மற்ற வங்கிகளின் கேமராக்களில் பதிவான காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். ஸ்டேட் பாங்க் கிளை ஒன்றின் கேமராவை ஆய்வு செய்தபோது, ஒருவன் சந்தேகப்படும்படி வங்கியை சுற்றிச் சுற்றி வருவது தெரிந்தது. அவன் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வீடியோ காட்சியை கீழ்கட்டளை, பெருங்குடி வங்கி ஊழியர்களிடம் காட்டினர். அதை பார்த்த ஊழியர்கள், அவன்தான் கொள்ளையன் என்பதை உறுதி செய்தனர். கொள்ளை நடந்தபோது அவன் மீசை, தாடி இல்லாமல் இருந்தான். இப்போது மீசை, தாடியுடன் உள்ளான் என்று தெரிவித்தனர்.
வீடியோவில் இருந்த அந்த ஆசாமி, சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். இன்ஜினியரிங் கல்லூரியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு படித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லூரிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விண்ணப்பத்தில் இருந்த போட்டோவை கைப்பற்றி, அவனது சொந்த ஊருக்கு தனிப்படையை அனுப்பி வைத்தனர். வீடியோவில் இருந்த ஆசாமியின் படத்தை பத்திரிகைகளுக்கும் போலீஸ் கமிஷனர் திரிபாதி வழங்கினார். கொள்ளையன் பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த செய்தியும் கொள்ளையன் படமும் பத்திரிகை, டிவிக்களில் வெளியானது. இந்நிலையில், வேளச்சேரி நேரு நகர் நேதாஜி ரோடு ஏ.எல்.முதலி 2-வது தெருவில் வசிக்கும் பார்வதி என்ற பெண், கொள்ளையன் படத்தை டி.வி.யில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது வீட்டில் கீழ் தளத்தில் வியாபாரிகள் என்று சொல்லி 5 பேர் தங்கியிருந்தனர். பார்வதி முதல் மாடியில் வசிக்கிறார். 2-வது மாடியை 2 பேருக்கு வாடகை விட்டுள்ளார். கீழ் தளத்தில், வாடகைக்கு இருந்தவர்களில் ஒருவன் நேற்று ஒரு சட்டை அணிந்திருந்தான். அதே சட்டையைதான் போலீசார் வெளியிட்ட படத்திலும் அணிந்திருந்தான். இதை கவனித்த பார்வதி, உடனடியாக கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு போன் செய்தார். வங்கி கொள்ளையர்களை பிடிக்க துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் நேற்றிரவு கிண்டி போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அதில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியும் இருந்ததால், அவர் போனை எடுக்கவில்லை. பரபரப்பு அடைந்த பார்வதி, தனது தம்பி முருகனிடமும் தகவலை தெரிவித்துள்ளார். முருகன், நேரடியாக கிண்டி போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்று, இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அங்கிருந்த போலீஸ்காரர், ‘அவர் மீட்டிங்கில் இருப்பதால் பார்க்க முடியாது. என்ன விஷயம்’ என்று கேட்டுள்ளார். அவரிடம் விஷயத்தை முருகன் தெரிவித்தார். அந்த தகவலை துணை கமிஷனர் சுதாகரிடம் போலீஸ்காரர் தெரிவித்தார். இதையடுத்து, முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களையும் துணை கமிஷனர் சுதாகர் கேட்டறிந்தார். பின்னர், கமிஷனர் திரிபாதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் ஆகியோரும் கிண்டி காவல் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க அவசர அவசரமாக வியூகம் வகுத்தனர். முருகன் அளித்த தகவலின்படி வீட்டின் வரைபடம் வரையப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் ஆயுதங்களுடன் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே இருப்பவர்களை வெளியில் வர போலீசார் எச்சரித்தனர். ஆனால், வீட்டுக்குள் இருந்தவர்கள் திடீரென போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 2 இன்ஸ்பெக்டர்கள் காயம் அடைந்தனர். உஷாரான போலீசார் ஜன்னலை உடைத்து அதன் வழியாக சுட்டனர். அதே நேரத்தில் தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி, துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீலன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்தனர். இரு தரப்பிலும் நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் வீட்டுக்குள் இருந்த கொள்ளையர்கள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த இன்ஸ்பெக்டர்கள், ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர். சண்டை நடந்த இடத்துக்கு கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். காயம் அடைந்தவர்களையும் பார்த்து விசாரணை நடத்தினர். தமிழகத்தையே கலக்கிய 2 வங்கி கொள்ளையில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கொள்ளையர்கள் யார்
சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையர்கள் பீகார் தலைநகர் பாட்னா மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் வினோத்குமார், சந்திர காரே, வினய் பிரசாத், அபய்குமார், அரீஷ்குமார் என்று போலீசார் தெரிவித்தனர்.
கீ14 லட்சம் 5 துப்பாக்கி சிக்கியது
டிவியில் காட்டப்பட்ட கும்பல் தலைவன் அணிந்திருந்த கட்டம் போட்ட சட்டை, ரத்த கறை படிந்து வீட்டில் கிடந்தது. ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. பாத்திரங்கள், துணிகள் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய 5 துப்பாக்கி, துணி பேக்கில் கட்டுக் கட்டாக மறைத்து வைத்திருந்த ரூ.14 லட்சம் பணத்தை கண்டெடுத்தனர்.
துப்பு துலக்க உதவிய
கொள்ளையனின் படம் நேற்று மாலை ‘பத்திரிகையிலும், போஸ்டரிலும் வெளியானது. வேளச்சேரி நேரு நகர் ஏ.எல்.முதலி தெருவில் வசிக்கும் பார்வதி என்ற பெண், தனது தம்பியை அழைத்து தமிழ் முரசு பத்திரிகையை வாங்கி வந்து பார்த்துள்ளார். அதில் இடம் பெற்றிருந்த கொள்ளையனின் படம், தன் வீட்டின் கீழ் தளத்தில் வாடகைக்கு இருக்கும் ஒருவனின் படம்போல இருந்ததால், அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தம்பி முருகன் மூலம் கிண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment