Friday, February 24, 2012சென்னை::சென்னையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் குடித்து விட்டு கார் ஓட்டி ஒருவர் மரணம் அடைந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயநீதிமன்றம் இவ்வாறு மரணம் விளைவிப்பர்களை 10 ஆண்டுகள் உள்ளே தள்ள வகை செய்யும் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.
கடற்கரை சாலையில் கார் ஓட்டிச் சென்ற போது, மஞ்சள் கோட்டை தாண்டி, எதிரில் வந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில், ஒருவர் இறந்தார். சிலர் காயமடைந்தனர். கடந்த மாதம் 26ம் தேதி, சம்பவம் நடந்தது. ரமேஷ் மீது முதலில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (ஏ) - அலட்சியம், கவனமின்மையால் மரணம் ஏற்படுத்துதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின், இவர் மதுபானம் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, பிரிவு 304 (2)ன் கீழ் வழக்கு மாற்றப்பட்டது. ஜனவரி 30ம் தேதி, ரமேஷ் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில், ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.
ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், "குடிபோதையில் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தும் வழக்குகளில், அபராதம் மட்டும் விதித்து, லேசாக விட்டு விடுகின்றனர். மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளின் இத்தகைய அணுகுமுறை, சட்டத்துக்கு முரணானது.
இதுபோன்ற வழக்குகளை அணுகும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையானது, இதே குற்றங்களை விளைவிக்கக் கூடிய மற்றவர்களுக்கும் விதிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
எனவே, இதை தனிப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றமாகப் பார்க்காமல், சமூகத்துக்கு எதிரான குற்றமாகக் கருத வேண்டும். விபத்துகளை குறைக்க வேண்டும் என்றால், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை நிறுத்த வேண்டும்.
அனைவரும் கவனமுடன் வாகனங்களை ஓட்ட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, கடந்த மாதம் 30ம் தேதி முதல், சிறையில் மனுதாரர் உள்ளார். போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு விட்டது. எனவே, அவரை ஜாமினில் விட உத்தரவிடப்படுகிறது.
சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில், தினசரி நான்கு வாரங்களுக்கு ஆஜராக வேண்டும். அதன் பின், தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். போலீசாருக்கும், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளுக்கும், கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு, வெறும் அபராதம் மட்டும் விதிக்காமல், தகுந்த தண்டனையை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு தண்டனை விதிக்கும் போது, சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கை, நோக்கத்தை மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment