Wednesday,January,04,2012திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே இன்று காலை பைக்கில் சென்ற ஒன்றியக்குழு துணைத்தலைவரை, 2 பேர் சரமாரியாக வெட்டி, கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த ஊத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் துரை (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதிமுகவை சேர்ந்த இவர், துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு துணைத் தலைவராகவும் உள்ளார். இன்று காலை 10 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருமஞ்சன கோபுரம் அருகே உள்ள தெற்கு மாடவீதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த சுமார் இரண்டரை அடி நீளமுள்ள வீச்சரிவாளால் துரையின் கழுத்தை சரமாரியாக வெட்டினர். கழுத்து, பாதி துண்டான நிலையில் பைக்கில் இருந்து சரிந்து விழுந்த துரை, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பைக்கில் வந்த கொலையாளிகள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். பட்டப்பகலில் கண்இமைக்கும் நேரத்தில் இந்த பயங்கர கொலையை கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்தபடி ஓடினர். துரை கொலையான தகவலறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து கதறி அழுதனர்.
தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக இந்த கொலை நடந்ததா அல்லது அரசியல் முன்விரோதம் தொடர்பாக கொலை நடந்ததா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment