Wednesday, January 4, 2012

இன்று சாவகச்சேரி வர்த்தகர்கள் முன்னெடுக்கவிருந்த கடையடைப்புப் போராட்டம் இறுதி நேரத்தில்!

Wednesday,January,04,2012
இலங்கை::இன்றைய தினம் சாவகச்சேரி வர்த்தகர்கள் முன்னெடுக்கவிருந்த கடையடைப்புப் போராட்டம் இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டுவிட்டது. தமிழத் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கும் வர்த்தகர்களுக்குமிடையே இடம்பெற்ற பேச்சுக்களையடுத்தே போராட்டத்தினை தற்காலிகமாக ஒருமாதம் பிற்போட வணிகர்கள் சம்மதித்திருந்தனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வசம் இருக்கும் சாவகச்சேரி நகரசபை நிர்வாகத்திற்கும் வணிகர் கழகத்திற்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இன்றைய கடை அடைப்பிற்கு வழி கோலியிருந்தது. வர்த்தக நிலையங்களுக்கு முன்பதாக வாகனங்களை நிறுத்த சாவகச்சேரி நகரசபை தடைவிதித்துள்ளது. வீதிப்போக்குவரத்து நடைமுறைமைகளை காரணங்காட்டி உள்ளுராட்சி விதிகளின் பிரகாரம் வர்த்தக நிலையங்கள் முன்பதாக வாகனங்களை நிறுத்த தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த வணிகர்கள் இன்றைய தினம் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதே வேளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வசம் இருக்கும் சாவகச்சேரி நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் பின்னணியினில் அரச ஆதரவுக் கட்சி உள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை ஒரு பகுதி வாத்தகர்கள் கடைகளை மூடியும் மற்றொரு சாரார் கடைகளை திறந்தும் இருந்தனர். இவ்விழுபறிகளிடையே தமிழ்; தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கும் வர்த்தகர்களுக்குமிடையே இடம்பெற்ற பேச்சக்களையடுத்தே போராட்டத்தினை தற்காலிகமாக ஒரு மாதம் பிற்போட வணிகர்கள் சம்மதித்திருந்தனர்.

முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தியும் வணிகர்களை சந்தித்திருந்தார். தமக்கான கால அவகாசமொன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேட்டுக்கொண்டதையடுத்தே போராட்டத்தை தற்காலிமாக பிற்போட வணிகர்கள் சம்மதித்திருந்தனர். ஏ-9 வீதிப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவது போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதுடன் விபத்துக்களிற்கும் காரணமாக அமைவதாக சாவகச்சேரி நகரசபை நிர்வாகம் தரப்பினில் கூறப்படுகின்றது. 2006ம் ஆண்டு காலப்பகுதியினில் இவ்வீதியோரங்களெங்கும் வாகனங்களை நிறுத்த படை தரப்பு தடை விதித்திருந்தது. கிளைமோர் குண்டுகளை காரணங்காட்டியே அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அப்போது மௌனம் காத்த வணிகர்கள் இப்போது ஏன் இவ்வாறான போராட்டமென புறப்பட்டுள்ளார்களென பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment