Thursday, January 12, 2012லண்டன் : இங்கிலாந்தில் இந்தியரும் அவரது வெள்ளைக்கார மனைவியும் மர்மமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டனர். இந்தியர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வசித்து வந்தவர் அவதார் சிங் (62). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது வெள்ளைக்கார மனைவி கரோல் (58). இவர்களது மகன் ஜேசன், போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பெற்றோரை ஜேசன் போனில் தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது இருவரும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மேற்கு மிட்லேண்ட்ஸ் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இருவரும் அடித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஜேசன் போலீஸ்காரர் என்பதால், பழைய குற்றவாளிகள் யாராவது பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலையை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு மேலும் ஒரு மகன், 2 மகள்கள் மற்றும் 8 பேரக் குழந்தைகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த வாரம், கிரேட்டர் மான்செஸ்டரில் 23வயது இந்திய மாணவர் அனுஜ் பித்வ் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் 8 நாட்களுக்கு முன்பு மாயமான 20 வயது இந்திய மாணவர் குர்தீப் ஹேயர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பு மற்றொரு இந்தியர் கொல்லப்பட்டிருப்பது இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment