Sunday, January, 01,2012சென்னை::தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகளும் மற்றும் வளர்ச்சிப் பணிகளும் வெற்றிகரமாக செயல்படுத் தப்படுவதற்கு உதவியாக விளங்கும் அரசு ஊழியர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 20102011ம் ஆண்டுக்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவை சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்துக்கு இணையாக ரூ.3,000 உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கவும், ‘ஏ மற்றும் பி’ பிரிவை சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ.1,000 சிறப்பு போனஸ் வழங்கவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்கள் (முன்னாள் தலையாரி, கர்ணம்) ஏனையோர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கவும் முதல்வர் ஆணையிட்டு ள்ளார்.
நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து மாத அடிப் படையில் நிலையான ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேர சில்லரை செலவின பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு திட்ட பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணி புரியும் பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரிந்து வரும் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம் ரூ.1,000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்திய பணி விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு சுமார் 264 கோடி ரூபாய் செலவாகும். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment