Saturday, January 28, 2012

ஏனாமில் கலவரம் வெடித்தது : நிறுவன மேலாளர் படுகொலை போலீஸ் தடியடியில் தொழிலாளி பலி!

Saturday, January 28, 2012
புதுச்சேரி::ஏனாமில் நேற்று தொழிலாளர்கள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆலைக்குள் புகுந்து தொழிலாளர்கள் தாக்கியதில் மேலாளர் உயிரிழந்தார். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தடியடியில் ஒரு தொழிலாளி பலியானார். பலர் காயமடைந்தனர். புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஏனாம் பகுதி, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. ஏனாமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். 300 பேர் நிரந்தர ஊழியர்கள். மீதமுள்ள தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற தொழிலா ளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக 6 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதுபோல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட முரளிமோகன் என்ற தொழிலாளி மீது தொழிற்சாலையில் மின்விசிறி திருடியதாக கூறி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 பேரையும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட முரளி மோகனையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கூறி தொழிலாளர்கள் நேற்று காலை தொழிற்சங்க வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே ஒரு தரப்பினர் ஆலைக்கு வேலைக்கு சென்றனர். அவர்களை மற்ற தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஏனாம் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட 10 பேரில் முரளி மோகன் என்ற தொழிலாளி நெஞ்சு வலியால் மரணம் அடைந்தார். போலீசாரின் தாக்குதலில் காவல் நிலையத்துக்கு உள்ளே முரளி மோகன் கொலை செய்யப்பட்டதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். பிரேத பரிசோதனை இங்கு நடத்தக்கூடாது, வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். தொழிலாளி இறந்த சம்பவம் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

தொழிலாளர் போரா ட்டம் தீவிரம் அடைந்து கலவரமாக மாறியது. கைது செய்தவர்களை விடுதலை செய்யக் கோரினர். ஆனால் போலீசார் மறுத்ததால், காவல் நிலையத்தை சூறையாடினர். 40 வாகனங்களுக்கு தீ வைத்தனர் இதையடுத்து போலீ சார், கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராய் சூர்யபிரகாஷம், இன்தம் ராஜகிருஷ்ணன், கனடி சீனு, கனடி சீனுவாசராவ், சூர்ய நாராயணன், கொடிசி கோபாலகிருஷ்ணன், ஜார்ஜ் விக்டர் பாபு, துர்கா பிரகாஷ், போன்டம் சூர்ய பகவான் ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்து ஏனாம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆவேசமடைந்த தொழிலாளர்கள் ஆலையின் உள்ளே சென்று தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த ஆலையின் மேலாண் இயக்குநர் ஜி.என் நாயுடு, ஆலையின் மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆலையின் மேலாளர் சந்திரசேகரன் படுகாயம் அடைந்து அங்கேயே இறந்தார். தொடர்ந்து பொறியியல் கல்லூரி, ஆலையின் வாகனத்தை அடித்து, நொறுக்கி தீ வைத்தனர். தொடர்ந்து ஏனாம் பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தொழிலாளர்களின் போராட்டத்தையொட்டி, ஏனாமில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறந்து போன தொழிலாளியின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். நீதி விசாரணை நடத்த கோரிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறுகையில், போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதற்கு புதுச்சேரி அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment